

விஷம் கொடுத்து சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அவரது கணவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசி தரூரிடம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் இரண்டாவது முறையாக இன்று விசாரணை மேற்கொண்டனர்.
முன்னதாக கடந்த மாதம் 19-ம் தேதியில் டெல்லி வசந்த விஹார் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் முதல் முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தரூரை கேள்விகளால் துளைத்தெடுத்த போலீஸார் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
இந்நிலையில் 4 வார இடைவெளிக்குள் தரூரிடம் 2-வது முறையாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணைக்காக தெற்கு டெல்லி சரோஜினி நகர் காவல்நிலையத்தில் அவர் ஆஜரானார். அவரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சசி தரூரின் 3-வது மனைவி சுனந்தா புஷ்கர்(51). இவர் கடந்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி இரவு, டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட் டுள்ளார் என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தராருக்கும், சசி தரூருக்கும் ‘நட்பு’ இருப்பதாக, கொல்லப்படுவதற்கு ஒருநாள் முன்பாக சுனந்தா குற்றம்சாட்டியிருந்தார்.