

மத்திய அமைச்சகங்களில் இருந்து ஆவணங்கள் திருடப்பட்டு பெருநிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆதாயம் அடைந்துள்ள பெருந்தலைகளை பிடிக்க டெல்லி போலீஸுக்கு முதல்வர் கேஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கேஜ்ரிவால் தனது ட்விட்டரில், "மத்திய அமைச்சகங்களில் ஆவணங்கள் திருடப்பட்டதை அம்பலப்படுத்திய டெல்லி போலீஸாருக்கு எனது பாராட்டுகள். திருடப்பட்ட ஆவணங்கள் மூலம் ஆதாயமடைந்த பெருந்தலைகளை பிடிக்க போலீஸார் முயற்சிக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
ஆவணங்கள் திருடப்பட்டது தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டுமென ஆம் ஆத்மி அரசு நேற்று வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சக ஆவணங்கள் திருடப் பட்டு வெளியிடப்பட்ட விவகாரம் தொடர்பாக மேலும் இருவரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர். இதன் மூலம் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியின் சாணக்யபுரி காவல் நிலையத்தின் குற்றவியல் பிரிவு போலீஸாரால் நேற்று முன் தினம் கைதான ஐந்து பேரிடம் நடத்திய விசாரணையை தொடர்ந்து அன்று நள்ளிரவில், பத்திரிகையாளரான சாந்தானு சைக்கியா மற்றும் எரி சக்தி ஆலோசகரான பிரயாஸ் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில், சைக்கியா டெல்லி யில் பெட்ரோலியத் துறைக்காக தனியாக ஒரு செய்தி இணைய தளம் நடத்தி வருகிறார். பிரயாஸ், எண்ணெய் மற்றும் எரிசக்தி தொழில் துறைக்கான ஆலோசனை நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவர்கள் இருவரும் மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி துறையில் இருந்து திருடப்படும் முக்கிய ஆவணங்களை பெருநிறுவனங்களிடம் விலை பேசி பணமாக்கி வந்துள்ளனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சகங்களில் இருந்து ஆவணங்கள் திருடப்பட்டு பெருநிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆதாயம் அடைந்துள்ள பெருந்தலைகளை பிடிக்க டெல்லி போலீஸுக்கு முதல்வர் கேஜ்ரிவால் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கு முன்னர், டெல்லி போலீசுடன் ஆம் ஆத்மி கட்சி எப்போதுமே இணக்கமான சூழல்லில் இருந்ததில்லை. கடந்த முறை முதல்வராக இருந்த போது, பாலியல் பலாத்கார வழக்கில் காவலர் ஒருவர் மீது நடவடிக்கைக் கோரி டெல்லி ரயில் பவன் முன்பு கேஜ்ரிவால் தர்ணாவில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.