Published : 16 Feb 2015 08:52 AM
Last Updated : 16 Feb 2015 08:52 AM

பிஹார் அரசியல் நெருக்கடிக்கு ஆளுநர், பாஜகவே காரணம்: ஐக்கிய ஜனதா தளம், கூட்டணி கட்சிகள் குற்றச்சாட்டு

பிஹாரில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதியும் பாஜகவுமே காரணம் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் குற்றம் சாட்டியுள்ளன.

வரும் 20-ம் தேதி சட்டப்பேரவை யில் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி நம்பிக்கை வாக்கு கோரவுள்ள நிலையில், அவரை தோற்கடிக்க ஐக்கிய ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கின்றன.

இது தொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவர் வசிஷ்ட நாராயண் சிங் நிருபர்களிட்ம நேற்று கூறியதாவது:

முதல்வர் மாஞ்சி நம்பிக்கை வாக்கு கோருவதற்கு, பாஜக தலைமையின் உத்தரவின் பேரில் ஆளுநர் நீண்டகால அவகாசம் கொடுத்திருக்கிறார். இதனால் தான் மாநிலத்தில் குழப்பமும் அரசியல் ஸ்திரமற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

நிதிச்சுமைகளைப் பற்றி கவலைப்படாமல் விளம்பரத் துக்காக பல நலத் திட்டங்களை அறிவிக்கிறார்.

அரசமைப்புச் சட்ட பதவியில் இருக்கும் ஆளுநர் அரசியல் ரீதியிலான அறிக்கைகளை வெளியிடுகிறார். மாநில பாஜக தலைவர் சுஷில் குமார் மோடியின் பேச்சை ஆளுநர் பிரதிபலிக்கிறார். இது ஆளுநர் பதவிக்கு பொருத்தமானது அல்ல என்றார் சிங்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் தாக்கு

இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தள மாநில தலைவர் ராமச்சந்திர பர்வே கூறும்போது, “ஐக்கிய ஜனதா தளம் கேட்டுக்கொண்டபடி மாஞ்சி பதவி விலகி இருக்க வேண்டும். மாறாக அவர் விலகாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. ஆனால் ஆளுநர் இந்த அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார். போதிய எம்எல்ஏக்கள் ஆதரவு மாஞ்சிக்கு இல்லை என்பது தெரிந்தும் ஆளுநர் இவ்வாறு செயல்படுவது முறையற்றது.

பெரும்பான்மையை இழந்த நிலையிலும் மாஞ்சி மக்களைக் கவருவதற்காக பல திட்டங்களை அறிவித்திருக்கிறார். இந்த திட்டங்களால் அரசுக்கு ரூ.50,000 கோடி செலவாகும். இதனால் மாநிலத்துக்கு நிதி நெருக்கடி ஏற்படும்” என்றார்.

காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் குமார் சவுத்ரி கூறும்போது, “தலித் என்பதால் தன்னை ஐக்கிய ஜனதா தளம் இழிவு படுத்துகிறது என்று மாஞ்சி கூறுகிறார். தனது நடத்தை மூலம்தான் அரசமைப்புச்சட்ட பதவியில் இருப்பவர் அறியப்படுகிறார். அவரது சமூக பின்னணியை யாரும் பார்ப்பதில்லை. நம்பிக்கை வாக்கு கோர முதல்வருக்கு நீண்ட அவகாசம் கொடுத்து ஜனநாயகத்தை கேலி செய்திருக்கிறார் ஆளுநர்” என்றார்.

ஆர்எஸ்எஸ் செயல்திட்டத்தை அமல்படுத்த மாஞ்சியை கைக்குள் போட்டுக்கொள்ள ஆளுநர் திரிபாதியும் பாஜகவும் முயற்சிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜிதேந்திர நாத் குற்றம்சாட்டி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x