Last Updated : 12 Feb, 2015 04:40 PM

 

Published : 12 Feb 2015 04:40 PM
Last Updated : 12 Feb 2015 04:40 PM

பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுப்படி பிஹார் ஆளுநர் செயல்படுகிறார்: நிதிஷ் குமார் மறைமுக குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரிலேயே பிஹார் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளார் என்று முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் மறைமுகமாக குற்றம்சாட்டி உள்ளார். இதுதொடர்பாக நிதிஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து கட்சியின் சட்டப்பேரவை தலைவராக நான் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினேன்.

இதற்கிடையே, பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்குமாறு ஆளுநருக்கு ஜிதன் ராம் மாஞ்சி கோரிக்கை வைத்தார். இதன்படி, உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஏற்க தயாராக இருந்தார். ஆனால் இதுவிஷயத்தில் ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் காலதாமதம் செய்து வந்தார்.

இந்த நிலையில்தான் ஜிதன் ராம் மாஞ்சி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு ஆளுநர், டெல்லியில் உள்ளவர்களின் உத்தரவுப்படி ஜிதன் ராம் மாஞ்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க கூடுதல் அவகாசம் (பிப்ரவரி 20) வழங்கி உள்ளார்.

வாக்கெடுப்பின்போது பாஜக உறுப்பினர்களின் ஆதரவு வேண்டுமானால், பற்றாக்குறையாக உள்ள 35 எம்எல்ஏக்களின் ஆதரவை திரட்டுமாறு மாஞ்சியிடம் பாஜவினர் கூறியுள்ளனர். இதன் மூலம் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோத செயலாகும். இவ்வாறு நிதிஷ் தெரிவித்தார். ஆட்சியமைக்க தம்மை அழைக்குமாறு விடுத்த அழைப்பின் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காததையடுத்து, 130 எம்எல்ஏக்களுடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நிதிஷ் குமார் புதன்கிழமை சந்தித்தார். அப்போது, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் மூத்த தலைவர்களும் உடனிருந்தனர்.

முதல்வர் மாஞ்சி பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு வசதியாக, சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட ஆளுநருக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதே நாளில் ஆளுநர் உரைக்குப் பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க மாஞ்சிக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து நிதிஷ் குமார் கூறும்போது, "வெறும் 12 எம்எல்ஏக்களின் ஆதரவு மட்டுமே உள்ள முதல்வர் மாஞ்சி தயாரிக்க உள்ள உரையை ஆளுநர் வாசிக்க உள்ளது தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x