Last Updated : 09 Feb, 2015 11:03 AM

 

Published : 09 Feb 2015 11:03 AM
Last Updated : 09 Feb 2015 11:03 AM

கருப்பு பண விவகாரத்தில் இந்தியாவுடன் ஒத்துழைத்து வருகிறோம்: சுவிட்சர்லாந்து தகவல்

கருப்பு பண விவகாரத்தில் இந்தியாவுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக சுவிட்சர்லாந்து கூறியுள்ளது.

சர்வதேச நிதி மற்றும் வரி விவகாரங்கள் தொடர்பான சமீபத்திய ஆண்டறிக்கையை சுவிட்சர்லாந்து வெளியிட்டுள்ளது. இதில் “வங்கிக் கணக்கு விவரங்கள் பரிமாற்றம் தொடர்பாக இந்தியா – சுவிட்சர்லாந்து இடையே கடினமான சூழ்நிலையும், கருத்து வேறுபாடுகளும் இருந்தபோதும், பேச்சுவார்த்தைக்கான கதவு எப்போதும் திறந்தே உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டில் வரி விவகாரங்களில் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்ட 4 முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று (அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி ஆகியவை மற்ற 3 நாடுகள்). இதில் இந்தியாவுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப் புழக்கத்தை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சுவிட்சர்லாந்துக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் நெருக்குதல் கொடுத்து வருகின்றன. சுவிட்சர்லாந்து வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் தொடர்பான விவரங்களை அளிக்க வேண்டும் என அந்நாட்டிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் திருடி வெளியிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்களை இந்தியா கோருவதாக கூறி சுவிட்சர்லாந்து அவற்றை அளிக்க மறுத்தது.

இந்நிலையில் தனிப்பட்ட முறையில் திரட்டிய ஆதாரங்களின் அடிப்படையில் இந்த விவரங்களை கேட்க இந்தியா முடிவு செய்தது. உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் கடந்த மாதம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மாநாட்டு நிகழ்ச்சிகளுக்கு இடையே சுவிட்சர்லாந்து நிதியமைச்சரை சந்தித்து கருப்பு பண விவகாரம் தொடர்பாக விவாதித்தார்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசின் ஆண்டறிக்கையில், “கருப்பு பணத்துக்கு எதிரான போரை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. சட்டவிரோதமாக பெற்ற புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இந்தியா கோரிய தகவல்களை சுவிட்சர்லாந்து அளிக்க மறுத்ததால் இரு நாடுகள் இடையிலான உறவில் சிக்கல் எழுந்துள்ளது. இரு நாடுகளிடையே கடினமான சூழ்நிலை நிலவியபோதும் பேச்சு வார்த்தைக்கான கதவு திறந்தே உள்ளது. சுவிட்சர்லாந்தின் முயற்சியில் கடந்த ஆண்டு அக்டோபரில் பெர்ன் நகரில் இரு நாட்டுப் பிரதிநிதிகளும் சந்தித்துப் பேசினர்.

சுமுகமாக நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு தரப்பு பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள ஒப்புக்கொள்ளப்பட்டது” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் சுவிட்சர்லாந்து நிதியமைச்சர் இவ்லின் விட்மர் ஸ்க்லும்ப் கூறும்போது, “நிலையான, போட்டிகளை எதிர்கொள்ளும் வகையிலான, சர்வதேச நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிதி மற்றும் வர்த்தக மையமாக சுவிட்சர்லாந்து இருக்கவேண்டும் என்றே விரும்புகிறோம். வலி ஏற்படுத்தக்கூடிய சில மாற்றங்களை செய்யாமல் இதை சாதிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x