Published : 21 Feb 2015 08:50 AM
Last Updated : 21 Feb 2015 08:50 AM

கடைசி நாளில் பலரும் போட்டியிட்டதால் பரபரப்பு: மோடி பெயர் பொறித்த கோட் ரூ.4.31 கோடிக்கு ஏலம்- சூரத் வைர நிறுவன வியாபாரி வாங்கினார்

அமெரிக்க அதிபர் ஒபாமா வருகையின்போது பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த அவரது பெயர் பொறித்த கோட் ரூ.4.31 கோடிக்கு ஏலம் போனது. அதை குஜராத் வைர வியாபாரியும் அவரது மகனும் சேர்ந்து விலைக்கு வாங்கினர்.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா டெல்லி வந்து சென்றார். அப்போது, ‘நரேந்திர தாமோதர் தாஸ்’ என்று பெயர் பொறிக்கப்பட்ட கோட் அணிந்திருந்தார் பிரதமர் மோடி. இதன் விலை ரூ.10 லட்சம் என்று கூறப்பட்டது. இதை காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் கிண்டல் செய்தனர்.

ஆனால், மோடி அணிந்த கோட் ஏலம் விடப்படும், அதில் கிடைக்கும் தொகை, கங்கை நதி தூய்மைத் திட்டத்துக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சூரத் நகரில் கடந்த புதன்கிழமை காலை ஏலம் தொடங்கியது. ஏலம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மோடி பதவியேற்ற பின் கடந்த 7 மாதங்களில் அவருக்கு வந்த 455 பரிசுப் பொருட்களும் ஏலத்துக்கு வந்தன.

முதல் நாள் புதன்கிழமை மாலை யில் அதிகபட்சமாக குஜராத்தை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் விரால் சவுக்கி என்பவர், ரூ.1.11 கோடிக்கு அந்த உடையை ஏலம் கேட்டார். நேற்றுமுன்தினம் மாலை ரூ.1.41 கோடிக்கு ஏலத் தொகை உயர்ந்திருந்தது. நேற்று காலை ஏலம் தொடங்கிய பிறகு கோட் விலை உயர்ந்து கொண்டே சென்றது.

கடைசியில் சூரத்தில் ‘தர்மானந்தா வைர நிறுவனம்’ நடத்தி வரும் தொழிலதிபர் லால்ஜி படேல் அவரு டைய மகன் ஹிதேஷ் படேல் இரு வரும் சேர்ந்து ரூ.4.31 கோடிக்கு அந்த உடையை ஏலம் எடுத்தனர். இத்த கவலை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர குமார் நேற்று மாலை அறிவித்தார்.

ஏலத்தின் கடைசி ஒரு மணி நேரம் பெரும் குழப்பம் நிலவியது. பலரும் ஏலத் தொகையை உயர்த்தி மோடியின் உடையை வாங்க மும்முரமாக இருந்தனர். இதுகுறித்து ஆட்சியர் ராஜேந்திர குமார் கூறியபோது, ‘‘ஏலம் முடிந்த பிறகு கூட ரூ.5 கோடிக்கு அந்த உடையை விலைக்கு கேட்டனர். ஆனால், மாலை 5 மணியுடன் ஏலம் முடிந்துவிட்டதால், அதை ஏற்கவில்லை’’ என்றார்.

ஏலத்தில் ரூ.4.31 கோடி கொடுத்து கோட் வாங்கிய லால்ஜி படேல் கூறுகையில், ‘‘நாட்டுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்துவிட்டது. அந்த உடையை வாங்க பலரும் ஆர்வம் காட்டினர். அதன் மூலம் கிடைக் கும் பணம் கங்கை நதியை தூய்மைப் படுத்த செலவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், எல்லோரும் நல்ல எண்ணத்துடன் ஏலத்தை அதிகரித்து கேட்டனர். ஆனால், மோடி அணிந்த கோட் எனக்குக் கிடைக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை ’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x