Last Updated : 05 Feb, 2015 10:23 AM

 

Published : 05 Feb 2015 10:23 AM
Last Updated : 05 Feb 2015 10:23 AM

பெங்களூருக்குள் நுழைய பிரவீண் தொகாடியாவுக்கு தடை: இந்துத்வா அமைப்புகள் கண்டனம்

விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா ஒரு வாரத் துக்கு பெங்களூரு மாநகருக்குள் நுழைய மாநகர காவல்துறை ஆணையர் எம்.என்.ரெட்டி அதிரடி யாக தடை விதித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள‌ பசவனகுடி நேஷனல் கல்லூரியில் வரும் 8-ம் தேதி ‘வீரமிகு இந்து மாநாடு' நடைபெறுகிறது. இதில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவீண் தொகாடியா சிறப்பு விருந்தினராக பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று நடைபெறும் மற்றொரு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்பதாக இருந்தது. இந்நிலையில் அவர் பெங்களூருக்குள் நுழைய ஒரு வாரத்துக்கு தடை விதித்து காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பெங்களூரு மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் பிரவீண் தொகாடியா நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அவரது கருத்துகள் மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந் திருக்கிறது. சமீபத்தில் கர் நாடகத்தில் மங்களூரு, பெலகாவி, விஜாப்புரா ஆகிய இடங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கர்நாட கத்தில் அமைதியை சீர் குலைக்க முயன்றதாக அவர் மீது 19 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. பல்வேறு மதத் தினரும் அமைதியுடன் வாழும் பெங்களூருவில் பிரவீண் தொகாடியா பேசுவதற்கு அனுமதி அளிக்க முடியாது. அவர் இங்கு வந்தால் பெங்களூருவின் அமைதி கேள்விக்குறியாக வாய்ப்புள்ளது. எனவே, பிரவீண் தொகாடியா வரும் 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை பெங்களூருவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது''என தெரிவித்துள்ளார்.

இதற்கு பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ‘‘பெங்களூரு காவல் துறையின் இந்த செயலை வன்மை யாக கண்டிக்கிறேன். பிரவீண் தொகாடியாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதன் மூலம் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியில் கருத்துரிமை பறிக்கப்பட்டு இருப் பது தெரியவந்துள்ளது” என்றார்.

பஜ்ரங் தளம் அமைப்பின் கர்நாடக மாநில தலைவர் சூரிய நாராயணா பேசும்போது, ‘‘இது பேச்சுரிமையை பறிக்கும் செயல். எனவே இதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறோம்'' என தெரிவித்தார்.

இதே போல விஷ்வ இந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த பலரும், ஸ்ரீராம் சேனா அமைப்பை சேர்ந்தவர்களும் பெங்களூரு காவல்துறையை கடுமையாக கண்டித்துள்ளனர்.

இதனிடையே கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘‘ காவல் துறை அறிவிப்பை மீறி பிரவீண் தொகாடியா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுப் போம். கர்நாடகத்தின் சட்டம் ஒழுங்கை கெடுப்பதை எனது தலைமையிலான அரசு ஒருபோதும் அனுமதிக்காது''என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x