Last Updated : 20 Feb, 2015 08:02 PM

 

Published : 20 Feb 2015 08:02 PM
Last Updated : 20 Feb 2015 08:02 PM

பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் பிப்.22-ல் பதவியேற்பு

பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் இம்மாதம் 22-ம் தேதி பதவியேற்கிறார். அம்மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக நீடித்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

நம்பிக்கை வாக்கெடுப்பு கோராமலேயே பிஹார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி இன்று (வெள்ளிக்கிழமை) காலை தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, பிஹாரில் புதிய ஆட்சி அமைக்க நிதிஷ் குமாருக்கு ஆளுநர் கேசரிநாத் திரிபாதி அழைப்பு விடுத்தார்.

ஆளுநரைச் சந்தித்து சுமார் அரை மணி நேரம் பேசிய நிதிஷ் குமார் பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, மார்ச் 16-க்கு முன்பாக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி தன்னிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

இம்மாதம் 22-ம் தேதி மாலை 5 மணிக்கு பிஹார் முதல்வராக பதவியேற்குமாறு தன்னிடம் ஆளுநர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், பிஹார் சட்டப்பேரவையின் புதிய பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து தனது அரசு விரைவில் முடிவு செய்யும் என்றும், கூட்டுக் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றுவதற்கான தேதியும் விரைவியில் இறுதி செய்யப்படும் என்றும் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

முன்னதாக, பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சியில் இருந்தது. பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கூட்டணி உடைந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் விலகினார். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஜிதன்ராம் மாஞ்சி புதிய முதல்வராகப் பொறுப்பேற்றார்.

அண்மைகாலமாக மாஞ்சிக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. மாஞ்சி பதவி விலக கட்சி தலைமை நிர்பந்தித்தது. ஆனால் அவர் பதவி விலக மறுத்துவிட்டார். இதற்குப் பதிலடியாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து மாஞ்சி நீக்கப்பட்டார். நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக ஏதுவாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆளுநர் முடிவெடுக்க தாமதிப்பதாகக் கூறி தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து நிதிஷ்குமார் முறையிட்டார்.

பல்வேறு திருப்பங்களுக்கு பிறகு சட்டப்பேரவையில் பிப்ரவரி 20-ம் தேதி முதல்வர் மாஞ்சி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

அதன்படி இன்று வாக்கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆளுநர் மாளிகைக்கு நேற்று காலை சென்ற அவர் ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

பிஹார் சட்டப்பேரவையின் மொத்த பலம் 243. இதில் 10 தொகுதிகள் காலியாக உள்ளன. பேரவையின் தற்போதைய பலம் 233. இதில் பெரும்பான்மையை நிரூபிக்க 117 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஜிதன் ராம் மாஞ்சிக்கு 87 எம்.எல்.ஏ.க்களை கொண்ட பாஜக ஆதரவு அளித்தது. மேலும் ஐக்கிய ஜனதா தள அதிருப்தி எம்.எம்.ஏ.க்கள் 12 பேரும் மாஞ்சியை ஆதரித்தனர். இதில் 4 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்க பாட்னா உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் நிதிஷ்குமாருக்கு 128 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் (24), காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட்(1), ஒரு சுயேட்சை எம்எல்ஏ ஆகியோர் ஆதரவு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x