

முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட, கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 அதிநவீன ஏவுகணை, நேற்று முதன்முறையாக நடமாடும் வாகனத்திலிருந்து ஏவி வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது. இது 1 டன் அணு ஆயுதங்களை சுமந்துகொண்டு சுமார் 5,000 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த சோதனை மைய (ஐடிஆர்) இயக்குநர் எம்.வி.கே.வி.பிரசாத் நேற்று கூறியதாவது:
ஒடிசா மாநிலம் வீலர் தீவில் உள்ள ஐடிஆர் மையத்தின் 4-வது வளாகத்தில் காலை 8.06 மணிக்கு அக்னி-5 ஏவுகணை ஏவப்பட்டது. 3 நிலைகளைக் கொண்ட இந்த ஏவுகணை முதல் முறையாக நடமாடும் செலுத்து வாகனத்தின் மூலம் ஒரு உருளைக்குள் வைத்து ஏவப்பட்டது. மற்ற அக்னி ஏவுகணைகளைவிட இது அதிநவீன வசதிகளைக் கொண்டது. இந்த ஏவுகணை திட்டமிட்டபடி குறிப்பிட்ட இலக்கை தாக்கி வெற்றி பெற்றது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகத்தால் (டிஆர்டிஓ) வடிவமைக்கப்பட்ட இந்த ஏவுகணை, 50 டன் எடையும், 17 மீட்டர் நீளமும் உடையது. இது 1 டன் அணு ஆயுதங் களை சுமந்து கொண்டு, தரையிலிருந்து 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மற்றொரு தரைப்பகுதியைத் தாக்கும் திறன் கொண்டது. மேலும் சில பரிசோதனைக்குப் பிறகு இந்த ஏவுகணை ராணுவத்தில் சேர்க்கப்படும்.
ஏற்கெனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள அக்னி-1 ஏவுகணை 700 கி.மீ., அக்னி-2 ஏவுகணை 2,000 கி.மீ., அக்னி-3 மற்றும் அக்னி-4 ஆகியவை 2,500 கி.மீ. முதல் 3,500 கி.மீ. வரையில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டவை.
பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உள்ளிட்ட பலர் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.