

பொதுக் கழிப்பிடங்கள் அதிகமுள்ள மாநிலங்கள் வரிசையில் தமிழம் இரண்டாம் இடத்தில் உள்ளதாக, மத்திய நகர்ப்புற வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு துறை அமைச்சர் பாபுல் சுப்ரியோ தெரிவித்தார்.
மாநிலங்களவையில் இன்று தூய்மை இந்தியா திட்டம் மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் குறித்து உறுப்பினர் வந்தனா சவான் எழுப்பிய கேள்விக்கு, மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ அளித்த பதில்:
"தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சமூக கழிப்பிடங்களும் பொதுக் கழிப்பிடங்களும் கட்டப்படும்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ் 25 பெண்களுக்கு ஒரு சமூக கழிப்பிடமும், 50 பெண்களுக்கு ஒரு பொதுக் கழிப்பிடமும் கட்டப்படும். ஆண்களை பொறுத்தவரை 35 பேருக்கு ஒரு சமூக கழிப்பிடமும், 100 பேருக்கு ஒரு பொதுக் கழிப்பிடமும் கட்டப்படும்.
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளுர்வாசிகள் பயன்படுத்த பொதுக் கழிப்பிடங்கள் கட்டப்படும். இதற்கு தேவைப்படும் நிதியில் 40 சதவீதத்தை மத்திய நகரப்புற வளர்ச்சி அமைச்சகம் வழங்கும்.
2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி நாட்டில் 44,04,752 பொது கழிப்பறைகள் உள்ளன. இதில் அதிகப்படியான கழிப்பிடங்கள் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 7 லட்சம் பொதுக் கழிப்பிடங்களை கொண்டு இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. 22 லட்ச பொதுக் கழிப்பிடங்களோடு மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
தூய்மை இந்தியா திட்டம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. அதன்படி, 2019 - ஆம் ஆண்டிற்குள் நாட்டில் 1.04 கோடி வீட்டு கழிப்பிடங்களும் 5 லட்சம் சமூக மற்றும் பொதுக் கழிப்பிடங்கள் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த 15 ஆண்டிற்குள் நகர்ப்புற மக்கள் எண்ணிக்கை 293 மில்லியன் வரை அதிகரிக்கும். அதாவது 2030-க்குள் நகர்ப்புற மக்கள் எண்ணிக்கை 670 மில்லியனாக உயர வாய்ப்பு உள்ளது. இந்த எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் 42.40 சதவீதமாக இருக்கும்" என்றார் அமைச்சர்.