

காய்கறிகள், பழங்கள், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களில் அதிக அளவில் பூச்சிக்கொல்லி இருப்பதாக மத்திய அரசின் சமீபத்திய ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தேசிய அளவி லான பூச்சிக்கொல்லி கண்காணிப்பு திட்டத்தின் கீழ், காய்கறிகள், பழங்கள், அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்களில் உள்ள பூச்சிக்கொல்லியின் அளவு குறித்து கடந்த 2005-ம் ஆண்டு முதல் ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2013-14 நிதியாண்டுக்கான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்டு, 25 ஆய்வகங்களில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 16,790 உணவுப்பொருள் மாதிரிகளில் 509-ல் இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையத்தின் (எப்எஸ்எஸ்ஏஐ) அனுமதிக்கப்பட்டதைவிட அதிக அளவில் பூச்சிக்கொல்லி இருப்பது தெரியவந்துள்ளது. அதேநேரம், இறைச்சி, பால் மற்றும் தரைக்கு மேல் உள்ள தண்ணீர் ஆகியவற்றில் பூச்சிக்கொல்லியின் அளவானது அனுமதிக்கப்பட்ட அளவை மிஞ்சவில்லை.
கோடை மற்றும் குளிர் காலத்தை அடுத்து வரும் மழைக் காலத்தில் உற்பத்தியாகும் காய்கறிகளில் பெரும்பாலானவற்றில் அதிக அளவில் பூச்சிக்கொல்லி இருப்பது தெரியவந்துள்ளது.