

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை எதிர்த்து போராடி வரும் சமூக ஆர்வலர் சுனிதா கிருஷ்ணனின் காரை, மர்ம நபர்கள் அடித்து நொறுக்கினர்.
பாலியல் பலாத்காரத்துக்கு எதிராக அவர் 'ShameThe Rapist' என்ற பிரச்சாரத்தை அவர் தொடங்கிய சில மணி நேரங்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுனிதா கிருஷ்ணன், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடி வருகிறார். அந்த வகையில், தனியார் செய்தித் தொலைக்காட்சியுடன் இணைந்து 'ShameThe Rapist' என்ற பிரச்சார இயக்கத்தை அவர் வியாழக்கிழமை தொடங்கினார்.
இந்தப் பிரச்சாரத்தின் முதல் நடவடிக்கையாக, இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்திய வீடியோ காட்சிகளை யூடியூப் வலைதளத்தில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் பாதிக்கப்பட்ட பெண்கள் இருவரின் முகமும் மங்கலாக்கப்பட்டிருந்தது. பலாத்காரத்தில் ஈடுபட்ட 5 நபர்களை பகிரங்கமாக பொது மக்களிடம் காட்டிக்கொடுக்க வகை செய்யப்பட்டிருந்தது.
பலாத்காரம் புரிந்தவர்களை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு அந்த வீடியோவுடன் சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேரின் படமும் வெளியிடப்பட்டது.
பாதிக்கப்பட்ட பெண்களின் உருவம் மறைக்கப்பட்ட அந்த 2 வீடியோக்களும் வாட்ஸ் ஆப் மற்றும் யூடியூப் மூலமாக பகிரப்பட்டு வைராலாக மாறியது.
இந்த நிலையில், இந்த வீடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய சமூக ஆர்வலர் சுனிதாவின் கார் மர்ம நபர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீஸில் அவர் புகார் அளித்துள்ளார். இது குறித்து சார்மினார் காவல்துறை கூடுதல் ஆய்வாளர் கிரன் கூறும்போது, "சுனிதாவின் வீடும் அலுவலகமும் அமைந்துள்ள பகுதிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவரது கார் தாக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை ஆய்வு செய்து இதை செய்தவர்களை தேடி வருகிறோம்" என்றார்.
தனது கார் தாக்கப்பட்டது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சுனிதா, "நான் சரியான பாதையில்தான் செல்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இத்தகைய செயல் மூலம் என்னை மிரட்டிவிடலாம் என்று நினைத்தால் இந்த அடியாட்கள் இதனை தொடரட்டும். தொடர்ந்து உங்களைப் போன்றவர்களை பகிரங்கமாக வெளிப்படுத்த அவமானப்படுத்துவேன்" என்று தெரிவித்துள்ளார்.