

மத்திய பட்ஜெட் ஏழை மக்களுக்கானது அல்ல; கார்பரேட் நிறுவனங்களுக்கும், தொழில்துறையினருக்கும் ஆதரவானது என காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.
மக்களவையில் இன்று காலை 11 மணியளவில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி 2015-16 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. கார்பரேட் வரி படிப்படியாக 25% வரை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய பட்ஜெட் கார்பரேட் நிறுவனங்களுக்கு, தொழில்துறையினருக்கு ஆதரவானது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, "மத்திய பட்ஜெட், கார்பரேட் நிறுவனங்களுக்கு, தொழில்துறையினருக்கு ஆதரவானது. இது ஏழை மக்களுக்கானது அல்ல. ரயில்வே பட்ஜெட்டைப் போலவே இது வெறும் தொலைநோக்குத் திட்டங்களின் தொகுப்பு. இதை செயல்படுத்துவது நடைமுறைக்கு அப்பாற்பட்டது.
தேர்தலில் வெற்றி பெற பாஜகவுக்கு உதவிய கார்பரேட் நிறுவனங்கள், பெரும் தொழில் நிறுவனங்கள் இந்த பட்ஜெட்டால் ஆதாயம் அடையும். பட்ஜெட் கார்பரேட் நிறுவனங்களுக்கு 'தன் வாப்ஸி' செய்வது போல் உள்ளது. அதாவது தேர்தல் சமையத்தில் பெற்ற ஆதாயத்தை திருப்பி அளிக்கும் தருணமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் அரசுக்கு நிறைய நிதி ஆதாரம் கிடைத்துள்ளது. ஆனால், அவற்றையெல்லாம் ஏழை எளிய மக்கள் நலனுக்குப் பயன்படுத்த அரசு தவறிவிட்டது.
பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இல்லை. முந்தைய அரசின் பழைய திட்டங்களுக்கு புதிய பெயர் சூட்டி சில அறிவிப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிஹார், மேற்குவங்க மாநிலங்களுக்கு சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பின்னணியில் அம்மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதே காரணம்.
கருப்புப் பணத்தை ஒழிக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என ஜேட்லி கூறியிருக்கிறார். முதலில், ஆட்சிக்கு வந்த 100 நாளில் கருப்புப் பணத்தை மீட்டெடுப்போம் என்றனர். இப்போது என்னவென்றால், கருப்புப் பணத்தை ஒழிக்க புதிய சட்டம் கொண்டுவரப்படும் என கூறுகிறார்கள். இப்படியே கத்திக் கொண்டிருப்பதால் மட்டும் கருப்புப் பணத்தை மீட்டெடுத்துவிட முடியாது.
2020-க்குள் அனைவருக்கும் வீட்டு வசதி செய்துத் தரப்படும் எனக் கூறியிருக்கிறார்கள். இந்திரா ஆவாஸ் யோஜனா போன்ற திட்டங்கள் செயல்பாட்டில்தான் உள்ளன. இதில் புதிதாக ஒன்றுமில்லை" என்றார்.