Published : 03 Feb 2015 03:23 PM
Last Updated : 03 Feb 2015 03:23 PM

மோடியை குறிவைக்கும் ஐ.எஸ். ஆதரவு ட்விட்டர் பக்கம்

"அமெரிக்க அதிபர் ஒபாமா டெல்லி வரும்போது அவரைக் குறிவைத்து கார்குண்டு தாக்குதல் நடத்த வேண்டும்" என ஒபாமா வருகைக்கு முன் வெளியான பகீர் ட்வீட் பதிவு இடப்பட்ட ட்விட்டர் பக்கம் ஒன்றை கண்டறிந்த உளவுத்துறை, அதனை உரிய நடவடிக்கைகள் மூலம் உடனடியாக முடக்கியது.

ஆனால், முடக்கப்பட்ட அதே வேகத்தில் மற்றொரு பெயரில் உருவெடுத்துள்ளது அந்த ட்விட்டர் பக்கம். ஆனால், இந்த முறை அந்த ட்விட்டர் பக்கத்தில் மிரட்டலுக்குள்ளாகியிருப்பவர் அமெரிக்க அதிபர் அல்ல, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

நரேந்திர மோடிக்கு எதிராக, அந்த ஐ.எஸ். ஆதரவு ட்விட்டர் பக்கத்தில் நடைபெற்ற உரையாடல் தற்போது வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியையும் குறிவைத்தே தீவிரவாதிகள் ஹேஷ்டேகில் பேசிக் கொண்டுள்ளனர்.

ஜனவரி 25-ஆம் தேதி @Magnetgas1 என்ற புதிய ட்விட்டர் கணக்கு தொடங்கப்பட்டிருக்கிறது.

சந்தேகத்துக்குரிய அந்த ட்விட்டர் கணக்கிலிருந்த சில ஹேஷ்டேகுகள் இதோ..

"மோடி, ஒபாமா இருவரும் அல்லாவின் எதிரிகள்'' என்று வெளியிட்ட அந்த ட்வீட்டுடன் #26January, #flag hosting, #car bomb, #chemical ஆகிய குறியீட்டு வார்த்தைகள் இடம்பெற்றன.

இந்தத் தகவல் பறிமாற்றங்களை புலனாய்வுத் துறை தீவிரமாக கண்காணித்து வந்துள்ளது.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைவதற்காக மும்பையிலிருந்து சென்ற நான்கு இளைஞர்களிள் ஒருவரது ட்விட்டர் கணக்கிலிருந்து தான் இது தொடர்பான ட்வீட்கள் வெளிவந்ததாகவும், துருக்கியிலிருந்து அந்த ட்விட்டர் பக்கம் இயக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த குறிப்பிட்ட ட்விட்டர் பக்கத்தை சைபர் பிரிவு முடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தகக்து.

இது குறித்து சைபர் கிரைம் பிரிவு அதிகாரி கூறும்போது, "முடக்கப்பட்ட பக்கங்கள் அனைத்தும் துருக்கியிலிருந்து இயங்கியுள்ளது.

500 ஆதரவாளர்கள் கொண்ட சந்தேகத்துக்குரிய கணக்குகிலிருந்து 220 ஐ.எஸ்-க்கு ஆதரவான ட்வீட்டுகள் இதுவரை வெளியாகியுள்ளன.

குறிப்பிட்ட நபர்களை குறிவைத்து தாக்குதல் நடத்த சமூக இணையதளங்கள் வழியாக சதிதிட்டம் நடந்திருப்பது நிச்சயமாகியுள்ளது. சமூக வலைதளங்களில் நாச வேலைக்கு திட்டம் தீட்டப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக எதிர்ப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தற்போதைய அவசரத் தேவை" என்றார்.

முன்னதாக மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள தானேவிலிருந்து இளைஞர்கள் ஆரிஃப் மஜீத், ஃபகத் ஷேக், அமான் தந்தல், சஹீம் தன்கி ஆகியோர் ஐ.எஸ். சேர்வதற்காக இந்தியாவை விட்டு வெளியேறினர். இதில் ஆரிஃப் மஜீத் என்ற இளைஞர் மட்டும் கடந்த நவம்பர் மாதம் தேசிய புலனாய்வுத்துறை மற்றும் மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் முயற்சியினால் மீட்கப்பட்டார். மற்றவர்கள் மீட்கப்படவில்லை.

கடந்த வாரத்திலும், ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் சேர முயற்சித்ததும், பின்பு அதிலிருந்து மீட்கப்பட்டதும் நடந்தது.

இது போல இந்தியாவிலிருந்து இளைஞர்களை சமூக வலைதளங்கள் வழியாக ஈர்த்து ஐ.எஸ். இயக்கத்தில் ஆள்சேர்க்கை நடப்பதாக தொடர்ந்து புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x