

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர் பங்கேற்க இருந்த பொதுக்கூட்ட மேடையை தலித் அமைப்பினர் தீ வைத்து எரித்தனர்.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தலுக்கு முன்பு பாதயாத்திரை மேற்கொண்டபோது, தலித் மக்களின் வளர்ச்சிக்கு பாடுபடுவதாக வாக்குறுதி அளித்திருந்தார். இதனால் ஆந்திரா, தெலங்கானாவில் உள்ள ‘தலித் இட ஒதுக்கீடு போராட்ட சமிதி’ அமைப்பினர் தெலுங்கு தேசம் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டனர்.
இந்நிலையில், முதல்வரான பிறகு முதன்முறையாக தெலங்கானாவில் உள்ள வாரங்கலில் நேற்று சந்திரபாபு நாயுடு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்கிடையே, தேர்தலின்போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால், அவரை தெலங்கானாவில் சுற்றுப்பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என தலித் அமைப்பினர் அறிவித்திருந்தனர்.
வாரங்கல் பஸ் நிலையம் எதிரே உள்ள ஹயக்ரீவா மைதானத்தில் சந்திரபாபு நாயுடு பங்கேற்பதற்காக ஏற்பாடு செய்திருந்த பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடையை தலித் அமைப்பினர் நேற்று காலையில் தீயிட்டு கொளுத்தினர். இதில் விழா மேடையின் பின்புறம் வைத்திருந்த திரைகள், கட்-அவுட்கள், பேனர்கள் போன்றவை தீயில் கருகின.
இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள், போலீஸில் புகார் செய்தனர். இந்நிலையில் வாரங்கல் மாவட்ட தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் இருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய தலித் அமைப்பினர், அந்த அலுவலத்துக்கு தீ வைத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பின்னர் போலீஸார் தலையிட்டு தலித் அமைப்பினரை கைது செய்தனர்.
சந்திரபாபு நாயுடுவின் வாரங்கல் சுற்றுப் பயணத்தின்போது, பல இடங்களில் தலித் அமைப்பினர், வழக்கறிஞர்கள் சங்கத்தினர், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அவரை முற்றுகையிட முயற்சித்தனர். அவர்களையும் போலீஸார் கைது செய்தனர்.