Published : 12 Feb 2015 10:26 AM
Last Updated : 12 Feb 2015 10:26 AM

காங்கிரஸின் வாக்குகளை அள்ளிய ஆம் ஆத்மி: பாஜகவுக்கு 1 சதவீதம் மட்டுமே இழப்பு

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், காங்கிரஸ், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகளின் பெருவாரியான வாக்குகள் ஆம் ஆத்மிக்கு சாதகமாக அமைந்ததே அக்கட்சியின் அமோக வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

கடந்த 2013 தேர்தலில் 68 இடங்களில் போட்டியிட்ட பாஜக, 31 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது அக்கட்சிக்கு 33.07 சதவீத வாக்குகள் கிடைத்தன. இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணைய புள்ளி விவரப்படி பாஜகவுக்கு 32.1 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. அதாவது கடந்த தேர்தலைவிட 1 சதவீதம் மட்டுமே சரிந்துள்ளது.

கடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 24.55 சதவீத வாக்குகளுடன் 8 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் இந்தத் தேர்தலில் அக்கட்சிக்கு வெறும் 9.8 சதவீத வாக்குகளே கிடைத்தன. கிட்டத்தட்ட 15 சதவீத வாக்குகளை காங்கிரஸ் இழந்துள்ளது.

அடுத்தபடியாக 5.35 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சிக்கு (பிஎஸ்பி) இந்த முறை 1.3 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 4 சதவீத வாக்குகளை அக்கட்சி இழந்தது. இதுபோல மற்ற சிறிய கட்சிகளின் வாக்குகளும் கணிசமாக சரிந்தன.

காங்கிரஸ் (15%), பிஎஸ்பி (4%), மற்றும் இதர சிறிய கட்சிகள் இழந்த வாக்குகள் அனைத்தும் ஆம் ஆத்மிக்கு கிடைத்துள்ளது. இதனால்தான் அக்கட்சியால் இமாலய வெற்றி பெற முடிந்தது.

கடந்த தேர்தலில் 70 இடங் களில் போட்டியிட்ட ஆம் ஆத்மி 29.49 சதவீத வாக்குகளைப் பெற்று, 28 இடங்களில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் 54.3 சதவீத வாக்குகளுடன் 67 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலைவிட சுமார் 25 சதவீத வாக்குகள் அதிகம் பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x