Last Updated : 18 Feb, 2015 09:36 AM

 

Published : 18 Feb 2015 09:36 AM
Last Updated : 18 Feb 2015 09:36 AM

அரசு விளம்பரங்களை நெறிப்படுத்த விதிகளை வகுக்கக் கூடாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்ப்பு

அரசு விளம்பரங்களை நெறிப்படுத்துவதற்காக நீதிமன்றம் விதிமுறைகளை வகுக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று எதிர்ப்பு தெரிவித்தது.

மத்திய அரசின் சார்பில் வெளியாகும் விளம்பரங்களை நெறிப்படுத்த விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்துக்காக மத்திய அரசின் பெயரில் தங்கள் புகைப்படத்துடன் விளம்பரங்களை வெளியிடுவதாகவும் இதனால் பொதுமக்களின் வரிப் பணம் வீணாவதாகவும் அதில் குற்றம்சாட்டி இருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய் பினாகி சந்திரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதிடும்போது, “ஆட்சியில் உள்ளவர்கள் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக, அரசின் சார்பில் விளம்பரங்களை வெளியிட்டு பொதுமக்களின் வரிப் பணத்தை தவறாக செலவிடுகின்றனர். எனவே இதை நெறிப்படுத்த நடுவர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி வாதிடும்போது கூறியதாவது:

அரசின் கொள்கை மற்றும் இதர விவகாரங்களை விளம்பரங்கள் வாயிலாகவே மக்களுக்கு தெரியப்படுத்த முடியும். எனவே, விளம்பரங்கள் வெளியிடும் விவகாரத்தை அரசிடமே விடவேண்டும். இவை நீதிமன்ற வரம்புக்கு அப்பாற்பட்டவை.

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு என்ற முறையில் நாடாளுமன்றத்துக்கு பதில் சொல்லும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. அரசு செய்யும் செலவுகள் அனைத்தும் நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு உட்பட்டவை. ஒவ்வொரு காசுக்கும் கணக்கு தரப்படுகிறது. அவை தலைமை கணக்குத் தணிக்கையாளரின் (சிஏஜி) தணிக்கைக்கு உட்படுத்தப்படுகிறது.

அரசு விளம்பரங்களில் எது அரசியல் ஆதாயம் பெற உதவுபவை என்பதை மதிப்பிடுவது கடினமானம். தற்போது பன்றிக் காய்ச்சல் நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விளம்பரம் வெளியிடப்படுகிறது. இதில் மத்திய சுகாதார அமைச்சர், செயலர் படங்கள் இடம்பெறக்கூடாது என்று கூற முடியுமா? குறிப்பிட்ட அளவுக்கு செலவு செய்ய ஒவ்வொரு அரசுத் துறைக்கும் நாடாளுமன்றம் உரிமை கொடுத்துள்ளது.

எனவே விளம்பரங்களை நெறிப்படுத்துவதற்காக நீதிமன்றம் மூலம் விதிமுறைகளை வகுப்பது சரியாக இருக்காது. இவ்வாறு அவர் வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், “அனைத்து தரப்பினரும் தாக்கல் செய்துள்ள கருத்துகளை அமர்வு பரிசீலிக்கும்” என்று தெரிவித்து தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x