

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர்களை நேற்று சந்தித்துப் பேசினார். இவர்கள் ஜம்மு காஷ்மீர் மற்றும் பிஹார் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.
டெல்லியின் ஜந்தேவாலன் பகுதியில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்கு நேற்று சென்ற அமித் ஷா, அந்த அமைப்பின் 2-வது முக்கிய தலைவரான சுரேஷ் பய்யாஜி ஜோஷி, இணை பொதுச் செயலாளர்கள் தத்தாத்ரேயா ஹோஸ்போல், சுரேஷ் சோனி, கிரிஷன் கோபால் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசி உள்ளார்.
பாஜக விவகாரங்களை கவனித்து வரும் கிரிஷன் கோபாலை அமித் ஷா தனியாகவும் சந்தித்துப் பேசி உள்ளார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் (பிடிபி) இணைந்து புதிய அரசை அமைப்பது தொடர்பாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
இதுதவிர, பிஹார் சட்டப் பேரவையில் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி தலைமையிலான அரசு மீது இன்று நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவு அளிப்பது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தி உள்ளனர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்ட படுதோல்வி குறித்தும் விவாதித்ததாகக் கூறப்படுகிறது.