

9400 கி.மீ தூரத்துக்கு இரு வழி / மூன்று வழி / நான்கு வழி பாதைகளுக்கான 77 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக, ரயில்வே பட்ஜெட்டில் அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
2015 - 16 நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு மக்களவையில் இன்று (வியாழக்கிழமை) தாக்கல் செய்தார்.
அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பட்ஜெட் உரையில், "நாட்டின் கடைகோடி எல்லை வரை ரயில் இணைப்பு அமைக்கும் திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் 7000 கி.மீ இரண்டு / மூன்று / நான்கு வழி தடங்களை அமைப்பதற்க்கான ஒப்புதல் பெற்ற திட்டங்களை விரைவு படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2015 - 16ல் 1200 கிலோமீட்டர் அளவிலான ரயில் தடங்கள் ஏற்படுத்தப்படும். மூலதன முதலீட்டில் ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி கடந்த ஆண்டில் அளிக்கப்பட்டதைவிட 84 சதவீதம் அதிகமாகும்.
800 கிலோமீட்டர் தூரத்துக்கு ரயில்வே பாதையை மாற்றவும் திட்டமிட்டுள்ளோம். 9400 கி.மீ உள்ளிட்ட இரு வழி / மூன்று வழி / நான்கு வழி பாதைகளுக்கான 77 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவற்றை மின்மயமாக்குதலுடன் சேர்த்து இந்த திட்டங்களுக்கு மொத்தம் ரூ.96,182 கோடி செலவாகும். கடந்தத இரு நிதி ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியைவிட இது 2700% அதிகமாகும்.
பாதைகளில் உள்ள நெரிசல்களை அகற்றுதல், அதிக வருவாய் ஈட்டுதல், கொள்திறனை அதிகரித்தல் ஆகியவற்றுக்கு இந்த திட்டங்களில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்பதை நியமிக்கப்பட்டுள்ள குழு உறுதி செய்யும். இந்த திட்டங்கள் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்" என்று அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.