Last Updated : 27 Feb, 2015 08:41 AM

 

Published : 27 Feb 2015 08:41 AM
Last Updated : 27 Feb 2015 08:41 AM

2015-16 ரயில்வே பட்ஜெட் தாக்கல்: பயணிகள் கட்டணம் உயரவில்லை; புதிய ரயில்கள் இல்லை

2015-16 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பயணிகள் கட்டணம் உயர்த் தப்படவில்லை. புதிய ரயில்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு கடந்த ஜூலையில் இடைக்கால ரயில்வே பட்ஜெட்டை அப்போதைய அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்தார்.

பின்னர் சதானந்த கவுடா மாற்றப்பட்டு சுரேஷ் பிரபு ரயில்வே அமைச்சராக நியமிக்கப்பட்டார். மோடி அரசின் முழுமையான முதல் ரயில்வே பட்ஜெட்டை மக்களவையில் நேற்று அவர் தாக்கல் செய்தார். சுமார் 70 நிமிடங்கள் அவர் பட்ஜெட்டை வாசித்தார். அவர் தனது தொடக்க உரையில் கூறியதாவது:

இந்திய பொருளாதாரம் என்பது உடலின் இதயம் போன்றது. இந்திய ரயில்வே நரம்பு மண்டலம் போன்றது. இதயத்துக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் முக்கிய பணியை ரயில்வே செய்கிறது. ரயில்வே ஒரு அடி முன்னேறினால் இந்தியா பல அடிகள் முன்னேறும்.

இந்திய ரயில்வே துறையை ஒரேநாள் இரவில் உயரத்தில் தூக்கி நிறுத்திவிட முடியாது. படிப்படியாகத்தான் முன்னேற்ற முடியும். பட்ஜெட் தொடர்பாக நாடு முழுவதும் சுமார் 20,000 பேரிடம் ஆலோசனைகளைக் கேட்டறிந்தேன். அதன் அடிப்படையிலேயே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய ரயில்வேயில் மிகப் பெரிய மாற்றத்தைக் காணலாம். விரைவில் 2030-ம் ஆண்டுக்கான கனவுத் திட்டத்தையும் வெளியிட இருக்கிறோம் என்றார்.

விரைவில் புதிய ரயில்

கடந்த ஜூலையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் 58 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் 2015-16-ம் ஆண்டுக்கான முழுமையான பட்ஜெட்டில் புதிய ரயில்கள் அறிவிக்கப்படவில்லை. எனினும் இந்த பட்ஜெட் தொடரிலேயே புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

‘ரயில்வேயின் மொத்த வரு வாயை ஒரு ரூபாயில் கணக்கிட் டால் 94 பைசா ஊழியர்களுக்காக செலவாகிறது, 6 பைசா மட்டுமே மிச்சமாகிறது’ என்று ஜூலை யில் தாக்கல் செய்யப்பட்ட இடைக் கால பட்ஜெட்டில் தெரிவிக்கப் பட்டது. மிகச் சிறந்த சார்ட்டட் அக்க வுன்டண்ட் ஆன சுரேஷ் பிரபு தனது பட்ஜெட்டில் 7 பைசாவை மிச்சப் படுத்தியுள்ளார். இந்த பட்ஜெட் டில் கவர்ச்சி திட்டங்களை வெளி யிடாமல் ரயில்வேக்கு உயிரூட்டும் வகையிலான திட்டங்களை மட்டுமே அவர் அறிவித்துள்ளார்.

சரக்கு கட்டணம் உயர்வு

ரயில்வே பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

சரக்கு ரயில்களில் சில பொருள்களின் மீதான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி யூரியா 10 %, இரும்பு, உருக்கு 0.8 %, மண்ணெண்ணெய், சமையல் காஸ் 0.8 %, நிலக்கரி 6.3 %, சிமென்ட் 2.7 % கட்டணம் அதிகரிக் கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.8.5 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். தற்போது நாளொன்றுக்கு 2 கோடியே ஒரு லட்சம் பயணிகள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். இந்த எண்ணிக்கையை 3 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரக்கு கையாளும் திறன் ஆண்டுக்கு 100 கோடி டன்னாக உள்ளது. இதனை 150 கோடி டன்னாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

ரயில் பெட்டிகளில் 17,000 கழிப்பறைகள் பயோ கழிப்பறை களாக மாற்றப்படும். 650 ரயில் நிலையங்களில் புதிதாக கழிப் பறைகள் கட்டப்படும். ஏ, பி தரத்தைச் சேர்ந்த 400 ரயில் நிலையங்களில் வை-பை இணையதள வசதி ஏற்படுத்தப்படும்.

நெடுந்தொலைவு ரயில்களில் தற்போது 60 நாட்களுக்கு முன்பு ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இனி மேல் 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.

மேலும் முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை ஐந்து நிமிடங்களில் பெற்றுக் கொள்ள ரயில் நிலையங்களில் சிறப்பு வசதிகள் செய்யப்படும்.

மூத்த குடிமக்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்பதிவு பெட்டிகளில் கீழ்படுக்கை ஒதுக்கப்படும். மேல் படுக்கைகளில் பயணிகள் எளிதாக ஏற மடக்கு ஏணி வசதி அமைக்கப்படும்.

ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்யும்போது ஐஆர்சிடிசி இணையதளத்தில் உணவு வகைகளையும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

சிசிடிவி கேமரா

பெண் பயணிகளின் பாதுகாப் புக்காக புறநகர் ரயில்களில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்தப் படும். பாதுகாப்பு தொடர்பான புகார் களுக்கு இலவச தொலைபேசி சேவை எண் 182 அறிமுகம் செய்யப் படுகிறது. ரயில் சேவை விவரங் களை அறிய உதவும் தொலைபேசி சேவை எண் 138, 24 மணி நேர சேவையாக மாற்றப்படுகிறது.

தற்போது எக்ஸ்பிரஸ் ரயில்கள் தோராயமாக 130 கி.மீட்டர் வேகத்திலேயே இயக்கப்படுகின் றன. எனவே 9 முக்கிய வழித்தடங் களில் ரயில்களின் வேகம் 200 கி.மீட்டராக அதிகரிக்கப்படும்.

3,438 ரயில்வே கிராசிங்குகளை அகற்ற ரூ.6,581 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 917 கிராசிங்குகளில் மேம்பாலம், சுரங்கப்பாலம் ஆகியவை அமைக் கப்பட உள்ளன. 10 முக்கிய நகரங் களில் சேட்டிலைட் ரயில் முனை யங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.

புல்லட் ரயில் திட்டம்

ரயில் பாதைகளின் நீளம் மேலும் 20 சதவீதம் வரை அதிகரிக் கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. 7,000 கி.மீட்டர் தொலைவுக்கு இரட்டை, மூன்று, நான்கு ரயில்வே பாதைகளை அமைக்கும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் ரூ.96,182 கோடியில் 77 ரயில்வே திட்டங்கள் நிறை வேற்றப்பட உள்ளன. 6,608 கி.மீட்டர் தொலைவு ரயில்வே பாதை மின்மயமாக்கப்பட உள்ளது.

மும்பை-அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்தை செயல் படுத்துவது குறித்து ஆய்வு நடத்தப் பட்டு வருகிறது. இந்த ஆய்வறிக்கை இந்த ஆண்டு மத்தியில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும். வட-கிழக்கு மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீரில் ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தப் படும், விவசாயிகளின் நலனுக்காக கிசான் யாத்திரை திட்டம் அறிமுகம் செய்யப்படும்.

அவசர உதவிக்கு 138-ஐ அழைக்கலாம்

ரயில் பயணிகளின் வசதிக்காக அனைத்து இந்திய அளவிலான ஹெல்ப்லைன் எண் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணம் தொடர்பான இடர்பாடுகள், மருத்துவ அவசர உதவி, உணவுப் பொருட்கள் தொடர்பான புகார்களுக்கு 138 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். பாதுகாவல் தொடர்பான அனைத்து புகார்களுக்கும் 182 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

அனைத்து ரயில் பயணிகளுக்கும் பாதுகாப்பான, பாதுகாவலுடன் கூடிய பயணத்தை ரயில்வே துறை உறுதி செய்யும்.

5 நிமிடத்தில் டிக்கெட் எடுக்க வசதி

முன்பதிவு செய்யாத பயணிகள் ரயில் நிலையத்துக்குள் நுழைந்த 5 நிமிடத்தில் டிக்கெட் எடுப்பதற்கு வசதியாக ‘ஆபரேஷன் 5 மினிட்ஸ்’ என்ற வசதி அறிமுகம் செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றியமைக்கப்பட்ட ‘ஹாட்-பட்டன்கள்’, நாணயம் வழங்கும் இயந்திரங்கள் மற்றும் ‘சிங்கிள் டெஸ்டினேஷன் டெல்லர்’ விண்டோஸ் ஆகிய வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் விரைவாக டிக்கெட் எடுக்க முடியும்.

மாற்றுத் திறனாளிகளின் வசதிக்காக சிறப்பு வசதி ஏற்படுத்தித் தரப்படும். இதன்படி ஆன்லைனில் ஒரு முறை பதிவு செய்து கொண்டால் சலுகை பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும். பல்வேறு மொழிகளில் இணையதளம் மூலம் டிக்கெட் பெறும் வசதியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சோதனை முயற்சியாக முன்பதிவு செய்யாத டிக்கெட்களை ஸ்மார்ட் போன்கள் மூலம் வழங்கும் திட்டம் மத்திய, மேற்கு மற்றும் தென்னக ரயில்வேயின் புறநகர் பிரிவுகளில் ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதி அனைத்து ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

ஸ்மார்ட் கார்டு மற்றும் நாணய தேர்வு வசதிகளுடன் கூடிய தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் பல்வேறு ரயில் நிலையங்களில் ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ளன. இது அனைத்து நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். டெபிட் கார்டை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் வசதியும் அறிமுகம் செய்யப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x