

நாடு முழுவதும் 101 ஆறுகளை நீர்வழிப் பாதைகளாக மாற்றுவது தொடர்பான மசோதா, வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என தரைவழி மற்றம் கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
இது தொடர்பாக அவர் நேற்று கூறும்போது, “இந்த மசோதா தொடர்பான குறிப்பு அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. வரும் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதாவை தாக்கல் செய்ய நாங்கள் முயற்சி செய்வோம்.
நீர்வழித் தடங்களை மேம்படுத்தும் பணிக்கு எனது அமைச்சகம் முன்னுரிமை அளித்து வருகிறது. நீர்வழிப் பாதையாக மாற்றுவதற்கு 101 ஆறுகளை அடையாளம் கண்டுள்ளோம்.
நீர்வழிப் போக்குவரத்து சிக்கனமானது. இதற்கு கி.மீட்டருக்கு 30 பைசா மட்டுமே செலவாகிறது. ஆனால் ரயில் போக்குவரத்துக்கு கி.மீட்டருக்கு ரூ. 1-ம், சாலைப் போக்குவரத்துக்கு ரூ. 1.50-ம் செலவாகிறது. சீனாவில் மொத்த சரக்குப் போக்குவரத்தில் 44 சதவீதம் நீர்வழிப் பாதையில் நடைபெறுகிறது. ஆனால் நம் நாட்டில் இது வெறும் 3.3 சதவீதமாக உள்ளது.
நம் நாட்டில் ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள் என 14,500 கி.மீ. உள்நாட்டு நீர்வழித் தடம் உள்ளது.
இதுவரை இதனை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை”. இவ்வாறு கட்கரி கூறினார்.