இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கு: ஐபிஎஸ் அதிகாரிகள் வன்சாரா, பாண்டேவுக்கு நிபந்தனை ஜாமீன்

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கு: ஐபிஎஸ் அதிகாரிகள் வன்சாரா, பாண்டேவுக்கு நிபந்தனை ஜாமீன்
Updated on
1 min read

இஷ்ரத் ஜஹான் மற்றும் 3 பேர் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில், ஐபிஎஸ் அதிகாரிகள் டி.ஜி.வன்சாரா மற்றும் பி.பி.பாண்டே ஆகியோருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

குஜராத் காவல் துறை ஏடிஜிபி ரேங்க் அதிகாரிகளான பாண்டே மற்றும் வன்சாரா ஆகியோரின் மனுக்களை ஏற்றுக் கொண்ட அகமதாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.ஆர்.உபாத்யாயா, இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

ஜாமீனில் விடுவிக்கப்பட்டதும் வன்சாரா குஜராத்துக்குள் நுழையக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் சனிக்கிழமைதோறும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.2 லட்சத்துக்கு சொந்த பிணையம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2007-ம் ஆண்டு சொராபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட வன்சாரா, 8 ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட உள்ளார்.

துளசிராம் பிரஜாபதி மற்றும் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்ட்டர் வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ள வன்சாரா பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சிறையில் இருக்கும்போதே ஓய்வுபெற்றார்.

முன்னதாக, இஷ்ரத் ஜஹான் வழக்கில் கடந்த 18 மாதங்களாக சிறையில் உள்ள பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மற்றொரு ஐபிஎஸ் அதிகாரி பிபி பாண்டேவுக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

வியாழன்தோறும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை கலைக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும் பாண்டேவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2004-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி அகமதாபாத் புறநகர் பகுதியில் குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் மும்ப்ராவைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், பிரணேஷ் பிள்ளை என்கிற ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ராணா மற்றும் ஜீஷன் ஜோஹர் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்தபோது பாண்டே காவல் துறை இணை ஆணையராக பதவி வகித்தார்.

என்கவுன்ட்டரில் கொல்லப் பட்ட அனைவரும் லஷ்கர்-இ-தய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அப் போதைய முதல்வர் நரேந்திர மோடியை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாகவும் குஜராத் காவல் துறையினர் குற்றம்சாட்டி யிருந்தனர்.

குஜராத் போலீஸாரும் உளவுத் துறையும் இணைந்து இந்த என்கவுன்ட்டரை திட்டமிட்டு நடத் தியதாக சிபிஐ குற்றப்பத்திரிகை யில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in