Last Updated : 06 Feb, 2015 03:03 PM

 

Published : 06 Feb 2015 03:03 PM
Last Updated : 06 Feb 2015 03:03 PM

செலவினங்களை மேலும் குறைக்க நடவடிக்கை: அருண் ஜேட்லி

நிதிப்பற்றாக்குறையை குறைப்பதில் ஏற்கெனவே இலக்கை எட்டியுள்ள நிலையில், செலவினங்களை மேலும் குறைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி முடிவு செய்துள்ளார்.

"செலவினங்களை மேலும் குறைக்க முடிவெடுத்துள்ளோம், ஏனெனில் வெளியிலிருந்து பெறப்பட்ட நிதியில் நீண்ட காலம் அரசை நடத்துவது விருப்பத்துக்குரியதல்ல.” என்று தொழிலதிபர்களுடன் வீடியோ மாநாட்டில் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது, “நம் வருவாய்க்கு மீறி செலவு செய்துவிட்டு, அடுத்த தலைமுறையினரை கடனாளியாக்கிச் செல்வது சிறந்த நிதிக் கொள்கையாகாது.

இதனால் செலவினங்களில் 10% குறைக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நிதிப்பற்றாக்குறையை 4.1%ஆக குறைக்கும் இலக்கு ஏற்கெனவே கடந்த நவம்பரில் எட்டப்பட்டது.

நிலையான வரித்திட்டங்களை ஏற்படுத்தும் அதே வேளையில் மாநிலங்களோ, மத்திய அரசோ வருவாயை அதிகரிக்க நியாயமற்ற முயற்சிகளை தவிர்ப்பதும் முக்கிய திட்டங்களாகும்.

1991-ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை நாம் உத்வேகத்தை கடைபிடித்திருந்தால் இந்நேரம் நம் நிதி இலக்குகளை எட்டுவதில் வேகமான நடைமுறைக்கு வந்து சேர்ந்திருப்போம். ஆனால் முடிவெடுப்பதில் தொடர்ச்சியான தடுமாற்றங்கள் மற்றும் தவறான முடிவுகள் நாம் இன்று வாய்ப்பைத் தவற விடும் சூழ்நிலையை உருவாக்கி விட்டது.

ஆனால் வரலாறு நமக்காக இழந்த வாய்ப்பை திரும்பப் பெற மீண்டும் வருகை தந்துள்ளது. எனவே இந்த வாய்ப்பைத் தீவிரமாகப் பயன்படுத்தி நாட்டை உயர் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல இந்த அரசு உறுதியாக உள்ளது. இதற்கு தொழிற்துறை மற்றும் கொள்கை வகுப்பாளர்களின் ஒத்துழைப்பு தேவை.

மின்சாரம், எரிசக்தி, ரயில்வே, துறைமுகங்கள் ஆகிய துறைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும், இந்தத் துறைகளில் அதிக முதலீடு மேற்கொள்ளப்படும்.”

என்றார் அருண் ஜேட்லி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x