Published : 17 Feb 2015 10:39 AM
Last Updated : 17 Feb 2015 10:39 AM

பணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க அனுமதி மறுத்ததால் குழந்தை பலி

பசியால் அழுத ஆறுமாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு, வேலை நேரத்தில் செல்வதற்கு அதன் தாயை ஒப்பந்ததாரர் அனுமதிக்காததால் குழந்தை இறந்து விட்டது.

இதுதொடர்பாக வட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் நடந்துள்ளது.

தெலங்கானா மாநிலம் நவாப்பேட்டை மண்டலம், காகர்லபாடு கிராமத்தை சேர்ந்தவர் மல்லேஸ்வரி. இவருக்கு 3 மகள்கள், 6 மாத ஆண் குழந்தை உள்ளனர். கணவனை விட்டு பிரிந்த இவர், கட்டிட வேலை செய்து வந்தார்.

மகபூப் நகரில் இருந்து சில கூலி தொழிலாளர்களுடன் மல்லேஸ்வரியும் தனது குழந்தைகளுடன் மேதக் மாவட்டத்தில் உள்ள என்.எம்.ஆர் எனும் தனியார் தொழிற்சாலையில் கட்டுமான பணிகளுக்காக வந்தார்.

அந்த பகுதியிலேயே குடிசையில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். கடந்த 7-ம் தேதி தனது 6 மாத கைக்குழந்தையையும் உடன் எடுத்துக் கொண்டு வேலைக்கு சென்றார். அங்கிருந்த ஒரு குடிசையில் குழந்தையை தூங்க வைத்து விட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது பசியில் குழந்தை அழுதது. இதனால் ’தாய்ப்பால் கொடுத்துவிட்டு வருகிறேன்’ என கட்டிட ஒப்பந்ததாரரிடம் மல்லேஸ்வரி கேட்டுள்ளார். அதற்கு ஒப்பந்ததாரர் அனுமதிக்கவில்லை. பணியை முடித்துவிட்டுப் போ என மனிதாபிமானமின்றி கூறியுள்ளார். இதனால், தாய்ப்பால் கொடுக்க முடியாமல் பணியைத் தொடர்ந்தார் மல்லேஸ்வரி.

நேரம் ஆக ஆக, குழந்தையின் அழுகை அதிகரித்தது. சிறிது நேரத்தில் குழந்தையின் அழுகை சத்தம் நின்றது. இதனால் பதறிப் போன மல்லேஸ்வரி ஓடிச் சென்று பார்த்தார். உடன் பணியாற்றிய கூலி தொழிலாளர்களும் விரைந்து சென்று பார்த்தனர்.

பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த குழந்தையை அருகில் இருந்த மருத்துவமனையில் கொண்டு போய் சேர்ந்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனால் கதறியழுத மல்லேஸ்வரி, ஒப்பந்ததாரரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் போலீஸ் வழக்கு ஏதாவது வந்து விடுமோ என பயந்த அந்த ஒப்பந்ததாரர், மல்லேஸ்வரியிடம் சிறிது பணம் கொடுத்து குழந்தையை ஊருக்கு வெளியே புதைத்து விட்டு சொந்த ஊருக்கு சென்று விடுமாறு கூறி அனுப்பி விட்டார்.

பின்னர் குழந்தையை நரசாபூர் என்ற இடத்தில் அடக்கம் செய்த மல்லேஸ்வரி, தனது மூன்று மகள்களுடன் தனது சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார். இச்சம்பவம், உடன் வேலை செய்தவர்கள் மூலமாக வெளியே கசிந்தது. தகவல் அறிந்த வட்டாட்சியர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

சம்பவம் நடந்த தொழிற்சாலை முன் நேற்று கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்ததாரரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட மல்லேஸ்வரி குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x