

நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் கூறியதாவது:
நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜனவரி முதல் பிப்ரவரி 12-ம் தேதி வரையில் இந்த நோய்க்கு 485 பேர் பலியாகி உள்ளனர். இந்த மாதத்தில் மட்டும் 279 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நோயைத் தடுப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. கடந்த 2009-ம் ஆண்டில் ஏற்பட்டது போலவே இப்போதும், சிகிச்சை அளிக்கும் பணியாளர்களுக்கு இந்த நோய் வேகமாகப் பரவி வருவதை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர். அதேநேரம் இதைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்து தாராளமாகக் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், பன்றிக் காய்ச்சல் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான அறிவுரையை மாநில அரசுகளுக்கு சுகாதார அமைச்சகம் அனுப்பி வைக்கும். பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து தாராளமாக சந்தையில் கிடைப்பதால் (ரூ.500), அவற்றை போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டியது அனைத்து மருத்துவமனைகளின் கடமையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த சர்வதேச மருந்தியல் நிபுணர் ரந்தீப் குலேரியா கூறும்போது, “இதுபோன்ற வைரஸ் சுகாதாரப் பணியாளர்களுக்கு வேகமாகப் பரவுவதற்கான ஆதாரம் இந்தியாவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.
ராஜஸ்தான் முதலிடம்
ராஜஸ்தானில் பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் 11 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் மாநிலத்தில் இந்த ஆண்டில் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. அடுத்தபடியாக குஜராத்தில் 117 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 56 பேரும், மகாராஷ்டிராவில் 51 பேரும் தெலங்கானாவில் 45 பேரும் டெல்லியில் 6 பேரும் பலியாகி உள்ளனர்.
பன்றிக் காய்ச்சல் நோய் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கையில் டெல்லி 2-ம் இடத்தில் (1,189) உள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை அங்கு குறைவாக இருக்கிறது. டெல்லி மக்கள் நோய் அறிகுறிகளை முன்கூட்டியே தெரிந்துகொண்டு சிகிச்சை எடுத்துக்கொள்வதே இதற்குக் காரணம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
உ.பி.யில் 7 பேர் பாதிப்பு
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மேலும் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் லக்னோவில் மட்டும் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது. இவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக முதன்மை மருத்துவ அதிகாரி எஸ்என்எஸ் யாதவ் தெரிவித்தார். இங்கு ஏற்கெனவே 3 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.