Published : 11 Feb 2015 02:37 PM
Last Updated : 11 Feb 2015 02:37 PM

டெல்லியில் நேரிட்டது பிரதமர் மோடியின் தோல்வி- நியூயார்க் டைம்ஸ்

'பிரதமர் மோடியின் தோல்வி' - டெல்லி தேர்தல் முடிவுகளை குறிப்பிட்டு இப்படி ஒரு தலையங்கத்தை வெளியிட்டுள்ளது நியூயார்க் டைம்ஸ் இதழ்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பிரம்மாண்ட வெற்றி குறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பிலிருந்து எவ்வித எதிர்வினையும் இல்லாவிட்டாலும்கூட நியூயார்க் டைம்ஸ் இதழ் தனது தலையங்கத்தில் விமர்சிக்கத் தவறவில்லை.

அந்தத் தலையங்கத்தில், "அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான தூதரக ரீதியான சந்திப்பு என்ற மிகப்பெரிய உயரத்தை எட்டிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தற்போது உள்ளூர் அரசியல் காரணமாக மண்ணைக் கவ்வ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக டெல்லியில் நடைபெறும் தேர்தல் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியப் பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்று கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக தொடர்ந்து நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று தன்னை யாராலும் வீழ்த்தமுடியாது என்ற நிலையை பாஜக ஏற்படுத்திவைத்திருந்தது.

ஆனால், டெல்லி தேர்தலில் நேர்ந்ததோ வேறு. டெல்லி தேர்தல் முடிவு மத்தியில் நிலவும் ஆட்சிக்கோ, மோடியின் பிரதமர் பதவிக்கோ எவ்வித இடையூறையும் ஏற்படுத்தப்போவதில்லை. ஆனால், அவர் இதுவரை அளித்த நிர்வாக, பொருளாதார மேம்பாட்டு வாக்குறுதிகள் அத்துனையும் நிறைவேற்ற வேண்டும் என்ற கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

இத்தோல்வி, மோடி அரசின் சிறுபான்மை விரோதப் போக்கு மற்றும் இந்து அடிப்படைவாத அமைப்புகளின் அத்துமீறல்களின் விளைவு என இந்தியாவைச் சேர்ந்த சில அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்கர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள் அவர்களோடு இந்தியர்கள் என பல்வேறு நாட்டு மக்களையும் தனது தொலைநோக்குத் திட்டங்கள் மீது நம்பிக்கை கொள்ளவைத்தார் மோடி. வரவிருக்கும் பட்ஜெட் மிகப்பெரிய அளவில் பகுப்பாய்தலுக்கு உட்படுத்தப்படும். காரணம் கட்டுமானத் துறையில் மேம்பாடு, வரி சீரமைப்பு போன்ற பல்வேறு வாக்குறுதிகளை மோடி ஏற்கெனவே கூறியிருக்கிறார். இவையும் இன்னும் பற்பல வாக்குறுதிகளுக்கும் பட்ஜெட்டில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளவே பட்ஜெட் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே சிறுபான்மையினர் வழிபாட்டுத்தலங்கள் மீதான மோடியின் மவுனம் குறித்து விமர்சித்த நியூயார்க் டைம்ஸ் குறுகிய இடைவெளியில் இப்போது டெல்லி தேர்தல் முடிவு குறித்தும் விமர்சித்துள்ளது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x