அபு சலீமுக்கு ஆயுள் தண்டனை: மும்பை தடா கோர்ட் தீர்ப்பு

அபு சலீமுக்கு ஆயுள் தண்டனை: மும்பை தடா கோர்ட் தீர்ப்பு
Updated on
1 min read

கட்டுமான நிறுவன அதிபர் பிரதீப் ஜெயின் கொல்லப்பட்ட வழக்கில், நிழல் உலக தாதா அபு சலீமுக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை தடா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக, இவ்வழக்கில் நிழல் உலக தாதா அபு சலீம் உட்பட 3 பேர் குற்றவாளிகள் என தடா நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி தீர்ப்பளித்தது. வழக்கில் சம்பந்தப்பட்ட வீரேந்திர ஜம்ப், மெந்தி ஹசன் ஆகியோரும் குற்றவாளிகள் என அறிவித்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் அபு சலீமுக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை தடா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

வழக்கு பின்னணி:

கடந்த 1995-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி பிரதீப் ஜெயின், மும்பையின் ஜுஹு பகுதியில் உள்ள தனது பங்களாவில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்து கிடந்தார். ஜெயின் தனக்கு இருந்த ஏராளமான சொத்தில் ஒரு பகுதியை தராததால் சலீம் அவரை கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக சலீம், மற்றொரு கட்டுமான நிறுவன உரிமையாளர் ஜாம்ப் மற்றும் ஹசன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை முடிந்ததையடுத்து பிப்ரவரி 16-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது.

கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட சலீம் தலைமறைவாக இருந்து வந்தார். பின்னர் போர்ச்சுகல் நாட்டில் கைது செய்யப்பட்டார்.

கடுமையான சட்டப் போராட்டத்துக்குப் பிறகு கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி சலீமை இந்தியாவிடம் ஒப்படைத்தது போர்ச்சுகல். இதையடுத்து மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில் சலீம் அடைக்கப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டு தற்போது அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in