

‘‘ஆதிவாசிகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பாதுகாக்கும்படி தான் அமைச்சராக இருந்த ஜெயந்தி நடராஜனிடம் கூறினேன். தவிர சுற்றுச் சூழல் அமைச்சக விவகாரங்களில் தலையிட வில்லை’’ என்று காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
மத்தியில் காங்கிரஸ் தலைமை யிலான அரசில் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி நடராஜன். கடந்த 2013-ம் ஆண்டு அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமைதியாக இருந்தவர், சில நாட்களுக்கு முன்னர் காங்கிரஸை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்தார். அதன்பின் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்த ஜெயந்தி நடராஜன், ‘சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த போது, ராகுல் காந்தியின் நெருக்கடி அதிகமாக இருந்தது. அவருக்கு நெருக்கமானவர்கள் தலையீடு அதிகமாக இருந்தது’ என்று குற்றம் சாட்டினார்.
ஆனால், ஜெயந்தியின் புகார் குறித்து அமைதி காத்து வந்த ராகுல் காந்தி, டெல்லியில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது வெளிப்படையாக பதில் அளித்தார். பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:
நான் ஏழைகளுக்காகவும் நலிவடைந்தவர்களுக்காகவும் பாடுபட்டு வருகிறேன். ஆதிவாசி களின் நலனுக்காகப் போராடி வருகிறேன். அவர்களின் நலன் களைப் பாதிக்கும் வகையில் சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டாம் என்றுதான் ஜெயந்தி நடராஜனிடம் கேட்டுக் கொண்டேன். நான் தொடர்ந்து ஆதிவாசிகளுக்காக, நலிவடைந்தவர்களுக்காக, குடிசைகளில் தங்கியிருப்பவர் களுக்காகப் போராடுவேன்.
காங்கிரஸ் கட்சியை தாக்குவதற்காக நரேந்திர மோடி மற்றும் அவரது அரசால் தூண்டி விடப்பட்டதால் ஜெயந்தி நடராஜன் அவ்வாறு புகார் கூறி வருகிறார். ஏழை மக்களுக்காகப் பாடுபட வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலில் நான் சேர்ந்தேன். தொழிலதிபர்கள், பணக்காரர்களின் நன்மைக்காக மோடி செயல்படுவது போல் செயல்பட மாட்டேன். இவ்வாறு ராகுல் பேசினார்.
மோடியை கிண்டல் செய்த ராகுல்
டெல்லி தேர்தல் பிரச்சாரத்தில் நேற்று ராகுல் காந்தி பேசியதாவது:
உங்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக மோடி சொன்னார். அதற்காக ‘இந்தியாவில் தயாரிப்போம்' என்ற திட்டத்தைக் கொண்டு வந்ததாகச் சொன்னார். அதில் இருந்து ஏதேனும் உருப்படியாகக் கிடைத்ததா என்று சொல்லுங்கள். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் வருகையின்போது அவர் சூட் அணிந்திருந்தார். அது ரூ.10 லட்சம் விலை மதிப்புள்ளது. அது இங்கிலாந்தில் தயாரானது. அவரோ உங்களிடம் இந்தியாவில் தயாரிப்போம் என்கிறார். எவருக்காவது அதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைத்ததா? இவ்வாறு அவர் கூறினார்.