

டெல்லியில் கிறிஸ்தவ பள்ளிக்கூடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை பொறுத்துக்கொள்ள முடியாது என டெல்லி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கேஜ்ரிவால் தனது ட்விட்டரில், "ஹோலி ஆக்ஸிலியம் பள்ளிக்கூடம் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். இது மாதிரியான சம்பவங்களை பொறுத்துக்கொள்ள முடியாது" என தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் முதல் டெல்லியில் கிறிஸ்தவ அமைப்புகள் மீது நடத்தப்பட்டுள்ள 6-வது தாக்குதல் இது என்பது கவனிக்கத்தக்கது. கடந்த மாதம் வஸந்த கஞ்ச் பகுதியில் உள்ள தேவாலயம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தலைநகர் டெல்லியில் கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் எதிரொலியாக, டெல்லியில் தேவாலயங்களுக்கு பாதுகாப்பு அளித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார்.
தெற்கு டெல்லியில் வசந்தவிஹார் பகுதியில் உள்ளது ஹோலி ஆக்ஸிலியம் பள்ளி. இந்தப் பள்ளிக்குள் இன்று அதிகாலை நுழைந்த சில மர்ம நபர்கள் பள்ளி முதல்வரின் அறையை சூறையாடியுள்ளனர்.
முன்னதாக, பள்ளி வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை அவர்கள் உடைத்து நொறுக்கியுள்ளனர். பள்ளிக்கூடம் தாக்கப்பட்டதை, டெல்லி கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார் சவரிமுத்து சங்கர் உறுதி செய்துள்ளார். பள்ளிக்கூடம் தாக்குதலுக்குள்ளான விஷயம் தெரியவந்தபிறகு பள்ளிக்கு இன்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி கூறும்போது, "சம்பவம் குறித்த தகவலறிந்தவுடன் போலீஸ் உயர் அதிகாரிகள் பள்ளி வளாகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு தடயங்களை சேகரித்துள்ளனர். மர்ம நபர்கள் சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்குமுன்னர் பதிவான காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்" என்றார்.