

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் தொடர்பான மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்கட்சியினர் கடும் அமளிக்கு மத்தியில் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. மசோதாவை அறிமுகம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் வெளிநடப்பு செய்தது.
மக்களவையில் மசோதாவை அறிமுகம் செய்த மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பிரேந்திர சிங், "மக்களவை உறுப்பினர்களின் எதிர்ப்பை கவனித்தில் கொள்கிறேன். மசோதா மீது விவாதம் நடக்கும் போது விரிவாக ஆலோசிக்கலாம்" என்றார்.
நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்துக்கு எதிராக, மத்திய அரசை எதிர்த்து இரண்டு நாள் போராட்டத்தை சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே நேற்று தொடங்கினார். டெல்லி ஜந்தர் மந்திரில் நடந்து வரும் இப்போராட்டத்தில் சமூக ஆர்வலர் மேதா பட்கரும் கைகோத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.