

துணை ராணுவப் படைக்கு இந்த ஆண்டு 62 ஆயிரம் போலீஸார் புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது,
“இந்த ஆண்டு துணை ராணுவம் மற்றும் இதர துணைப்படைக்கு மிகப்பெரிய அளவில் ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வை பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்எஸ்சி) நடத்தும். இந்த ஆண்டு அக்டோபரில் இறுதித் தேர்வு நடைபெறும்” என்றார்.
சிஆர்பிஎப், பிஎஸ்எப், ஐடிபீபி, எஸ்எஸ்பி, சிஐஎஸ்எப், என்ஐஏ மற்றும் எஸ்எஸ்எப் உள்ளிட்ட மத்திய படைகள் சார்பில் ஆண், பெண் உட்பட மொத்தம் 62,390 பேர் புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 16 சதவீதம் (8,533) பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த காலியிடங்களை நிரப்பு வதற்காக, உடல் தகுதி, எழுத்துத் திறன், மருத்துவத் தகுதி என மூன்றடுக்கு தேர்வை பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்எஸ்சி) நடத்தும்.
10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 18 முதல் 23 வயதுக்குட்பட்டவர்கள் இந்தத் தேர்வில் கலந்து கொள்ளலாம். வெற்றி பெறுவோருக்கு மாதாந்திர ஊதியம் ரூ.20,200 வழங்கப் படும்.