

இந்தியாவில் உள்ள வெவ்வேறு பழங்குடியினர்கள் எப்படி தங்கள் பழமையான கலாச்சாரத்தையும் அவர்களது கைவினைத் திறன்களையும் இவ்வளவு காலம் பாதுகாத்துவர முடிந்தது என்பதை விளக்கும் ''வனஜ் - தேசிய பழங்குடியினர் திருவிழா'' புதுடெல்லியில் தொடங்கியது.
புராதன கலாச்சாரம்
ஆறுநாள் விழாவாக நடைபெற உள்ள இந்த 'வனஜ் - தேசிய பழங்குடியினர் திருவிழா' வில் இசை மற்றும் நடனங்களும் நடைபெற உள்ளன. பழங்குடியினரின் புராதன கலாச்சாரத்தை உயிர்ப்பிக்கும் இவ்விழா புதுடெல்லியில் திறந்தவெளி அரங்குகளில் பல்வேறு நிகழ்வுகளாக நடைபெற உள்ளது.
நம் நாட்டில், சமூகரீதியாகவும் மற்றும் விருந்தோம்பும் தன்மைகளுக்காககவும் பெயர்பெற்ற இப் பழங்குடியினர் வலுவான சமுதாயப் பிணைப்பு கொண்டவர்கள் ஆவர். ஒவ்வொரு பழங்குடியினருரும் கூடியிருந்தாலும் தனித்தனி அடையாளத்தோடு இருப்பவர்கள்.
கைவினைத்திறன் செய்முறை
முதல்நாள் நிகழ்வாக, அங்கிருந்த அரங்குகளில் ஒன்றில் ஒரு கைவினைஞர் மண்பாண்டத் தொழிலை செய்து காட்டியவாறே தம்முடைய கலாச்சாரத்தைப் பற்றி பெருமையுடன் எடுத்துக்கூறினார்.
வித்தியாசமான பல வகைக் கற்கள் மற்றும் களிமண்ணைக்கொண்டு ஒரு குவளையை செய்துகாட்ட பல மணிநேரங்களை எடுத்துக்கொண்டார். அவர் என்ன செய்கிறார் என்றே தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தபோது நம் புருவங்களை உயர்த்தும்விதமாக அழகியதோர் மண்குவளையை அவர் செய்து முடித்தார்.
கண்கவர் நடன நிகழ்ச்சிகள்
இத்திருவிழாவில் பழங்குடியினரின் வாழ்வை அறிந்துகொள்ளும் வகையில் ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன. வேறுபட்ட மாநிலங்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும்விதமாக நிகழ்த்தப்பட்ட கண்கவர் நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.
2011ல் நடைபெற்ற மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 750 ஆதிதிராவிட பழங்குடியின சமூகங்கள் இந்தியா வெங்கும் பரந்த அளவில் மலைக் குன்றுகளில் உள்ள காட்டுப் பகுதிகள், சமவெளிகள், பாலைவனங்கள், கடலோரம் மற்றும் தீவுகளில் வசித்து வருவதாக குறிப்பிடப்பட்டது.
ஒருங்கிணைந்த வெளிப்பாடு
அவர்களது வாழ்வாதாரம் பல்வேறு இழிவுக்கு ஆளாகி அச்சுறுத்தல்களின்ல் இடம்பெயரப்பட்டபோதும் தங்கள் கலாச்சாரத்தை பொன்போல போற்றி பாதுகாத்து வந்துள்ளனர். ஆக, இக் கண்காட்சி மனிதகுல கருவூலமாக திகழ்கிறது. மெல்ல மெல்ல அழிந்துவரும் இந்திய பழங்குடியின சமுகத்தின் வெவ்வேறு வாழ்நிலைகளை ஒருங்கிணைந்த ஒரு கதை சொல்லலாக கூறுகிறது.
இதில் அஸாம், சண்டிகர், குஜராத், மத்திய பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், மற்றும் ஒரிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் குறிப்பிடும்படியான 900 பழங்குடியினர் இதில் கலந்துகொண்டுள்ளனர்..
பழங்குடியினரின் தெய்வங்கள்
இந்த மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்ட விலைமதிப்பற்ற கைவினை மண்பாண்டங்கள், ஓவியங்கள், மேல் அங்கிகள், சால்வைகள், நுண்ணிய வேலைப்பாடுமிக்க அவர்களது தெய்வங்களோடு அவர்களது மாறுபட்ட பல்வேறு சமையல் வகைகள் கதம்பமாக பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
விற்பனைக்கும் கிடைக்கும்
புதுடெல்லியில் இக்கண்காட்சி கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் குறைந்தது. ஒருநாளைக்கு 500 பேர் வந்து பார்வையிடுகின்றனர். இந்த அரங்குகளில் வேறுபட்ட பழங்குடியினரின் வாழ்க்கைகளை வெளிப்படுத்தும் ஓவியங்கள், சால்வைகள், பர்சுகள் உள்ளிட்ட பல பொருட்கள் 200 ரூபாயிலிருந்து 1500 வரையில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
இந்த விழாவின் பயனுள்ள இன்னொரு விஷயமாக - இக்கண்காட்சி பாபா காரக் சிங் மார்க்கில் அமைந்துள்ள இந்திரா காந்தி தேசிய கலை மைய வளாகத்திலும் நடந்துவருகிறது. இக்கண்காட்சிகளில் நடைபெறும் எந்தநிகழ்வுக்கும் கட்டணம் ஏதுமில்லை. கண்காட்சியை கண்டுகளித்து மேன்மையான அனுபவத்தைப் பெறவேண்டும் என்ற நோக்கம் மட்டும இருந்தாலே போதுமானது.
தமிழில்: பால்நிலவன்