

நில மசோதாவில் எதிர்க்கட்சிகளின் நடைமுறைக்கு சாத்தியப்பட்ட யோசனைகளை பரிசீலிக்க அரசு தயாராக இருப்பதாக, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர் கூறும்போது, "நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் எதிர்க்கட்சிகளின் நடைமுறைக்கு சாத்தியப்பட்ட யோசனைகளை பரிசீலிக்க அரசு தயாராக இருக்கிறது.
அர்த்தமுள்ள, நடைமுறைக்கு சாத்தியப்பட்ட யோசனைகளை அரசு பரிசீலிக்க தயாராக இருக்கிறது என்பதை பலமுறை எடுத்துரைக்கிறேன்.
ஆனால், காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா, மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பிருதிவிராஜ் சவான் உள்ளிட்ட பலர் நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவை அவர்கள் நன்கு புரிந்து கொண்டு சட்டத்தை நிறைவேற்ற உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தகுந்த ஆலோசனைக்குப் பின்னரே, அரசு நில மசோதாவில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. ஆனால், இப்போது சிலர் மசோதாவில் இதைச் சேர்க்க வேண்டும், அதை நீக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்துகின்றனர்.
இது தொடர்பாக அரசின் உயர்மட்டத் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடைய பரிந்துரைகளை பரிசீலித்து எது நல்லதோ அதை இந்த அரசு முன்னெடுத்துச் செல்லும்" என்றார்.
எதிர்ப்பு ஏன்?
நிலம் கையகப்படுத்தும் மசோதாவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள சில திருத்தங்கள் ஏற்புடையதல்ல என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
நிலத்தை விவசாயிகளிடம் கையகப்படுத்த ஒப்புதல் பெறுதல், நிலம் கையகப்படுத்துவதால் ஏற்படும் சமூக தாக்கங்களை மதிப்பிடுதல் போன்றவை தொடர்பான உட்பிரிவுகளை மத்திய அரசு நீக்கியிருப்பது விவசாயிகள் நலனுக்கு எதிரானது என்பது எதிர்க்கட்சிகளின் வாதம்.
மேலும், கையகப்படுத்தப்படும் நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாகவும் எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றாவிட்டால் அந்த நிலத்தை உரியவர்களிடமே திருப்பிக் கொடுக்கும் வகையில் இருந்த சட்ட உட்பிரிவையும் தற்போதைய அரசு நீக்கியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன என்பது கவனிக்கத்தக்கது.