காஷ்மீரில் 2 மாத இழுபறி முடிவுக்கு வந்தது: மஜக - பாஜக கூட்டணி ஆட்சி; முப்தி முகமது தலைமையில் புதிய அரசு

காஷ்மீரில் 2 மாத இழுபறி முடிவுக்கு வந்தது: மஜக - பாஜக கூட்டணி ஆட்சி; முப்தி முகமது தலைமையில் புதிய அரசு
Updated on
2 min read

ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஐனநாயக கட்சி (மஜக), பாஜக இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது. அதன்படி மஜக மூத்த தலைவர் முப்தி முகமது தலைமையில் அந்த மாநிலத்தில் விரைவில் புதிய அரசு பதவியேற்கிறது.

கடந்த டிசம்பரில் காஷ்மீரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 87 உறுப்பினர்கள் கொண்ட சட்டப்பேரவையில் மஜக 28 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 25, தேசிய மாநாட்டுக் கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களில் வெற்றி பெற்றன.

சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக நான்கு கட்சிகளும் திரைமறைவு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. மஜகவுக்கு தேசிய மாநாட்டு கட்சியும் காங்கிரஸும் தாமாக முன்வந்து ஆதரவு அளித்தன. ஆனால் மஜக அதனை ஏற்கவில்லை.

மஜக நிபந்தனைகள்

பல்வேறு திருப்பங்களுக்குப் பிறகு மஜக மூத்த தலைவர்களும் பாஜக மூத்த தலைவர்களும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கினர். இரு கட்சிகளும் வெவ்வேறு துருவங்கள் என்பதால் பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுந்தன.

பாஜகவுடன் கூட்டணி அமைக்க மஜக சில நிபந்தனைகளை விதித்தது. அதன்படி காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கக் கூடாது, ஆயுதப் படை சட்டத்தை படிப்படியாக வாபஸ் பெற வேண்டும், 6 ஆண்டுகளுக்கும் முப்தி முகமது சையதுவே முதல்வராக நீடிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை அந்தக் கட்சி முன்வைத்தது.

இதனால் கூட்டணி உறுதியாவதில் இழுபறி நீடித்தது. எனினும் இரு கட்சிகளின் தலைவர்களும் சுமார் 15 சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தினர். கடந்த 2 மாதங்களாக நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் தற்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

மோடியை சந்திக்கிறார் முப்தி

இந்த தகவலை பாஜக மாநில பொதுச்செயலாளர் அசோக் கவுல் உறுதி செய்துள்ளார். அவர் கூறியபோது, பாஜக-மஜக இடையே கூட்டணி இறுதியாகி உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். அதன் பின்னர் மாநிலத்தில் புதிய அரசு பதவியேற்கும் என்று தெரிவித்தார். இதுகுறித்து மஜக செய்தித் தொடர்பாளர் நயீம் அக்தர் கூறியபோது, எங்கள் கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சையது விரைவில் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசுவார் என்று தெரிவித்தார்.

அதற்கு முன்னோட்டமாக மஜக தலைவர் மெகபூபா முப்தி இன்று டெல்லி செல்கிறார். அங்கு அவர் பாஜக மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார். புதிய கூட்டணி ஆட்சி குறித்து மஜக, பாஜக கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:370-வது சட்டப்பிரிவு, ஆயுதப் படை சட்டம் வாபஸ் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் மஜக, பாஜக இடையே சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் ஆட்சி, நிர்வாகம் தொடர்பாக இரு கட்சிகளும் இணைந்து குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளன. அதன் அடிப்படையிலேயே ஆட்சி நடத்தப்படும்.

காஷ்மீர் சட்டப்பேரவையின் பதவிக் காலம் 6 ஆண்டுகள். இந்த 6 ஆண்டுகளுக்கும் மஜக மூத்த தலைவர் முப்தி முகமது சையதுவே முதல்வராக நீடிப்பார். உள்துறை, நிதித்துறை ஆகியவை மஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. சுற்றுலா, நீர்வளம், பொது சுகாதாரம், திட்டம் உள்ளிட்ட துறைகள் பாஜக வசம் இருக்கும் என்று இரு கட்சிகளின் வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.

டெல்லி தேர்தல் எதிரொலி

மக்களவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மகாராஷ்டிரம், ஹரியாணா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றிவாகை சூடிய பாஜக அண்மையில் நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

இதைத் தொடர்ந்து மஜகவுக்கு முதல்வர் பதவியை பாஜக விட்டுக் கொடுத்திருப்பதால் கூட்டணி உறுதியாகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in