Published : 22 Apr 2014 05:58 PM
Last Updated : 22 Apr 2014 05:58 PM

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: உடந்தையாக இருந்த டெல்லி போலீஸார்: கோப்ராபோஸ்ட் இணையதளம் பரபரப்பு தகவல்

சீக்கியர்களுக்கு எதிரான கலவரத் தின்போது டெல்லி போலீஸாரும் உடந்தையாக செயல் பட்டனர் என்று கோப்ராபோஸ்ட் புலனாய்வு இணையதளம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.

பல்வேறு மோசடி, திரைமறைவுச் சம்பவங்களை அம்பலப்படுத்தி வரும் கோப்ராபோஸ்ட் புலனாய்வு இணையதளம், சீக்கியர் கலவரம் தொடர்பாக கடந்த ஓராண்டாக “ஸ்டிங் ஆபரேசன்” (ரகசிய புலனாய்வு) நடத்தியுள்ளது.

இதுதொடர்பாக பல்வேறு போலீஸ் உயரதிகாரிகளிடம் நடத் தப்பட்ட விசாரணை ரகசியமாக வீடியோ எடுக்கப்பட்டது. அந்த வீடியோ தொகுப்புகள் கோப்ரா போஸ்ட் இணையதளத்தில் செவ் வாய்க்கிழமை வெளியிடப் பட்டுள்ளன.

1984 அக்டோபர் 31-ம் தேதி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவரது சீக்கிய பாதுகாவலர்கள் 2 பேரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து டெல்லி முழு வதும் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்தது. மூன்று நாள்களாக நடத்தப்பட்ட வெறியாட்டத்தில் 3,000-க்கும் மேற் பட்ட சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கோப்ராபோஸ்ட் இணையதள நிருபர் ஆசித் தீட்சித் ரகசிய விசாரணை நடத்தினார். அன்றைய டெல்லி போலீஸ் தலைவர் எஸ்.சி. டாண்டன் உள்ளிட்ட உயரதிகாரி களிடம் சாதாரண நபர்போல் பேசி அவர்களின் பேச்சை ரகசியமாகப் பதிவு செய்தார். அதன் விவரங்கள் வருமாறு:

இந்திரா காந்தியை கொன்ற சீக்கியர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று ஆட்சியாளர்கள் ரகசிய உத்தரவு பிறப்பித்தனர். அதன்பேரில் டெல்லி முழுவதும் கொத்து கொத்தாக சீக்கியர்கள் வேட்டையாடப்பட்டனர்.

அந்த கொடூர சம்பவங்களை டெல்லி போலீஸார் தடுக்காமல் வெறுமனே வேடிக்கை பார்த்தனர். கலவரத்தில் ஈடுபட்டோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக கலவரத்தில் ஈடுபட் டோருக்கு போலீஸார் உடந்தையாக செயல்பட்டனர்.

போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஆயிரக்கணக்கான புகார்கள் வந்தன. அவற்றில் 2 சதவீதம் மட்டுமே பதிவு செய்யப்பட்டன. படுகொலைச் சம்பவங்களை மறைப்பதற்காக கட்டுப்பாட்டு அறை மற்றும் போலீஸ் நிலைய பதிவு புத்தகங்கள் மாற்றப்பட்டன.

கலவரம் குறித்து விசாரித்த குஷம் மிட்டல் கமிஷன் 72 போலீஸ் அதிகாரிகள் கடமை தவறி இருப்பதாக சுட்டிக் காட்டியது. அவர்களில் 30 பேரை பணி நீக்கம் செய்ய கமிஷன் பரிந்துரைத்தது. ஆனால் அன்றைய உள்துறை அமைச்சகம் யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.

கல்யாண்புரி இன்ஸ்பெக்டராக இருந்த ஷோர்வீர் சிங் தியாகி, திரிலோபுரி குருத்வாராவில் தங்கியிருந்த சீக்கிய குடும்பங் களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி னார். நடுத்தெருவில் நிறுத்தப்பட்ட அவர்கள் கொலைவெறி கும்பலின் தாக்குதலுக்கு பலியாகினர். அந்த ஒரு சம்பவத்தில் மட்டும் 500 பேர் உயிரிழந்தனர்.

பல்வேறு இடங்களில் கீழ்நிலை போலீஸார் கலவரக்காரர்களை அடக்க முற்பட்டபோது உயரதிகாரி கள் அவர்களை தடுத்துவிட்டனர். சில போலீஸ் அதிகாரிகள், உயிர் பலியானோர் எண்ணிக்கையை குறைத்து காட்டுவதற்காக ஏராள மான உடல்களை ரகசியமாக புதைத்துவிட்டனர்.

இதுகுறித்து பாஸ்கர் என்ற போலீஸ் அதிகாரி கூறியதாவது: கலவரத்தில் நேரடியாக தொடர் புடைய பல்வேறு போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சில போலீஸ் அதிகாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டன. அவர் கள் வெறும் பலியாடுகள் மட்டுமே.

சம்பவத்தன்று மாலை 4 மணிக்கு கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு எனது பகுதிக்கு கூடுதல் படைகளை அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன். ஆனால் கடைசி வரை போலீஸ் படை அனுப்பப் படவில்லை. கலவரக்காரர்களுக்கு ஆதரவாகவே போலீஸ் அதிகாரி கள் செயல்பட்டனர். இந்திரா காந்தி சுடப்பட்ட தகவல் அறிந்து அன்றைய குடியரசுத் தலைவர் ஜெயில் சிங் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றபோது அவர் மீதுகூட கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவித்தார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x