

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பாயும் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்பு திட்டத்தை செயல் படுத்தி, சாத்தான்குளம், திசையன்விளையில் வெள்ளத் தடுப்பு கால்வாய் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த வாரம் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியது: சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 82-வது வல்லுநர்கள் மதிப்பீட்டு குழு கூட்டம் பிப்ரவரி 26 மற்றும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் தமிழகம், மகாராஷ்டிரம், அருணாசலப் பிரதேசம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் உள்ள 3 முக்கியத் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அருணாசலப் பிரதேசத்தில் திபாங் பள்ளத்தாக்கு பகுதியில் 3 ஆயிரத்து 97 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் ஜிண்டால் மின் நிறுவனத்தின் நீர் மின் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்படவுள்ளது. இது ரூ.14 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதே போல இமாச்சலப் பிரதேசத்தில் 300 மெகாவாட் நீர் மின் திட்டம் ஒப்புதல் பெற வாய்ப்பு உள்ளது.
மகாராஷ்டிரம் தெலங்கானா இடையே உள்ள கோதாவரி ஆற்றின் கிளை நதி நீரை சிறப்பாக பயன்படுத்தும் வகையில் வெள்ள தடுப்பு கால்வாய் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு ரூ.10,500 கோடியாகும். இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் அந்த இரு மாநிலங்களிலும் பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பயனடையும்.
தமிழகத்தின் கடைக் கோடி வறட்சிப் பகுதியான சாத்தான்குளம், திசையன் விளையில் வெள்ளத் தடுப்பு கால்வாய்கள் அமைத்து நீரை சிறப்பாக பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட இருக் கிறது. இதற்காக திருநெல் வேலி, தூத்துக்குடி மாவட்டங் களில் பாயும் தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு ஆகியவை இணைக்கப்பட வுள்ளன. இத்திட்டம் ரூ.572.4 கோடி மதிப்புடையது. இதனால் 23 ஆயிரத்து 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பயனடையும்.