Last Updated : 14 Feb, 2015 05:35 PM

 

Published : 14 Feb 2015 05:35 PM
Last Updated : 14 Feb 2015 05:35 PM

எளிமையான உடையில் பதவியேற்ற கேஜ்ரிவாலும் அவரின் குழுவினரும்

ஆம் ஆத்மியின் தலைவரான அர்விந்த் கேஜ்ரிவாலும், அவரின் அமைச்சரவை சகாக்களும் இன்று (சனிக்கிழமை) எளிமையான முறையில் சாதாரண மனிதர்களைப் போல உடையணிந்து பதவியேற்றுக் கொண்டனர். ஆம் ஆத்மியின் கருத்துகளைப் பிரதிபலிக்கும் விதமாக அனைவரின் ஆடைகளும் இருந்தாலும், கேஜ்ரிவால் வழக்கமாக அணியும் தனது மஃப்ளரை அணியவில்லை.

வரலாற்றுச் சிறப்பு கொண்ட ராம்லீலா மைதானத்தில், வழக்கமான தன்னுடைய நீல ஸ்வெட்டர், சாம்பல் பேண்ட் அணிந்து டெல்லியின் எட்டாவது முதலமைச்சராகப் பதவியேற்றார் அர்விந்த் கேஜ்ரிவால். ’மஃப்ளர் மேன்’ஆக அறியப்படும் கேஜ்ரிவால், வெயில் அதிகமாக இருந்ததால் பதவியேற்பு விழாவின் போது மஃப்ளர் அணியவில்லை.

கேஜ்ரிவாலும், ஆறு அமைச்சர்களும் இந்தியில் பதவிப்பிரமாண உறுதிமொழி எடுத்துக்கொண்டபோது அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது.

மணிஷ் சிசோதியா, அசிம் அகமது கான், சந்தீப் குமார், சத்யேந்திர ஜெயின், கோபால் ராய் மற்றும் ஜிதேந்தர் சிங் டோமர் ஆகிய ஆறு அமைச்சர்களுக்கும் துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மணிஷ் சிசோதியாவும், ஜெயினும் சட்டை, பேண்ட் அணிந்திருக்க மற்ற அமைச்சர்கள் குர்தா, பைஜாமா அணிந்திருந்தனர்.

எல்லா அமைச்சர்களுமே ’மே ஆம் ஆத்மி ஹூன் ’(நான் ஒரு சாமானியன்) என்ற வாக்கியம் பொறித்த கட்சித் தொப்பிகளை அணிந்திருந்தனர்.

கேஜ்ரிவால் உணர்ச்சிமிக்க தனது உரையை 1959-ல் வெளிவந்த ’பாய்கம்’என்ற படத்தில் வரும் ’இன்சான் கா இன்சான் சே ஹோ பாய்சாரா’(சகோதரத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் உலகளவில் எடுத்துச் செல்வோம்) என்ற பாடலோடு முடித்தார். 2013 ஆம் ஆண்டு பதவியேற்கும்போதும், கேஜ்ரிவால் இதே பாடலைப் பாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விழாவில் அவரோடு கைகோர்த்து அந்தப் பாடலைப் பாடினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x