

மத்தியப்பிரதேச மாநிலத்தில் கோயில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் 400-க்கும் மேற் பட்டோர் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.
மத்தியப்பிரேதச மாநிலம், உஜ்ஜைனி மாவட்டம், சிரிடி என்ற கிராமத்தில் சிவன் கோயில் உள்ளது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்தக் கோயிலில் நேற்று முன்தினம் ரவையில் இனிப்பு கலந்து செய்யப்பட்ட பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று பிற்பகல் தொடங்கிய இந்த பிரசாத விநியோகம் நள்ளிரவு வரை நீடித்துள்ளது.
இந்நிலையில் பிரசாதம் சாப்பிட்ட கிராம மக்கள் 400-க்கும் மேற்பட்டோர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் சுகாதார அதிகாரி ஒருவர் நேற்று கூறும்போது, “பாதிக்கப்பட்டவர் களில் 99 பேர் மட்டும் தற்போது உஜ்ஜைனி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று உடனே வீடு திரும்பிவிட்டனர். கோயில் பிரசாதத்தின் விஷத்தன்மை குறித்து ஆய்வு செய்ய, அதன் மாதிரியை சேகரித்துள்ளோம்” என்றார்