

டெல்லியில் கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி போலீஸ் கமிஷனரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
தெற்கு டெல்லியில் வசந்தவிஹார் பகுதியில் உள்ளது ஹோலி ஆக்ஸிலியம் பள்ளி. இந்தப் பள்ளிக்குள் இன்று அதிகாலை நுழைந்த சில மர்ம நபர்கள் பள்ளி முதல்வரின் அறையை சூறையாடியுள்ளனர்.
முன்னதாக, பள்ளி வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை அவர்கள் உடைத்து நொறுக்கியுள்ளனர். பள்ளிக்கூடம் தாக்கப்பட்டதை, டெல்லி கத்தோலிக்க திருச்சபையின் பாதிரியார் சவரிமுத்து சங்கர் உறுதி செய்துள்ளார். பள்ளிக்கூடம் தாக்குதலுக்குள்ளான விஷயம் தெரியவந்தபிறகு பள்ளிக்கு இன்று விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இச்சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ்.பாஸியை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்தார். அப்போது, டெல்லியில் கிறிஸ்தவ பள்ளிக்கூடத்தின் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மோடி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் சமீப காலமாக தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுவந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் குறுகிய கால இடைவெளியில் 5 தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இவ்விவகாரம் உலகளவில் கண்டனத்தை பெற்றுள்ள நிலையில், தற்போது கிறிஸ்தவ பள்ளிக்கூடம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உள்துறை செயலருக்கு அறிவுரை:
உள்துறை செயலர் எல்.சி.கோயலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, "டெல்லியில் அதிகரித்து வரும் குற்றங்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தி அத்தகைய விரும்பத்தகாத நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும். தலைநகரில் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.