

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாதர்பூர் அருகே உள்ள மீதாபூரில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசியதாவது: ஒருவர் (நரேந்திர மோடி) பிரசாரம் செய்வதே வேலையாக கொண்டு செயல்படுகிறார். இன்னொருவர் (அர்விந்த் கேஜ்ரிவால்) தர்ணா மன்னராக திகழ்கிறார்.
பாஜகவும் ஆம் ஆத்மியும் முடியாததை முடியும் என்று பேசி மக்களை மயக்குகின்றன. வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர். இவர்கள் குறித்து மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும். வெறும் அலங்கார வார்த்தைகளும் கோஷங்களையும் வைத்து நாட்டை நடத்திவிடமுடியாது.
ஊழலை ஒழிப்போம் இதைச் செய்வோம் அதைச்செய்வோம் என்று மக்களவைத் தேர்தலின் போது வாக்குறுதிகளை அள்ளி வீசியவர்கள் ஒன்றையுமே செய்யவில்லை. சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதும் டெல்லி நகரின் சில இடங்களில் வகுப்பு வன்முறை நடந்தது. இதெல்லாம் டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டு நடத்தப்படும் செயல்.
வெறுப்புணர்வு அரசியலை நடத்தும் இத்தகைய சக்திகள் தோற்கடிக்கப்பட வேண்டும்.மதச்சார்பற்ற சக்திகள் வலுப் பெற மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். டெல்லியில் 2013 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப்பிறகு ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது.
ஆனால் ஆம் ஆத்மி கட்சியினர் அரசை நடத்தாமல் தப்பி ஓடினால் போதும் என்று பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.