Published : 18 Feb 2015 11:36 AM
Last Updated : 18 Feb 2015 11:36 AM

பெங்களூருவில் சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பெங்களூருவில் 'ஏரோ இந்தியா-2015' சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த போர் விமானங்கள், சாகச விமானங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றன.

ஆசியாவிலே மிகப் பெரிய விமான கண்காட்சியான, 'ஏரோ இந்தியா விமானத் தொழில் கண்காட்சி' 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாதுகாப்பு துறையால் பெங்களூருவில் நடத்தப்படுகிறது.

வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் 10-வது ஏரோ இந்தியா- 2015 விமான‌ கண்காட்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த‌ பிரதிநிதிகள்,பொருளாதார வல்லுநர்கள், ஆராய்ச்சி மாணவர்கள்,தொழிலதிபர்கள் என 1500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.

5 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த கண்காட்சியில் அமெரிக்கா,ஜெர்மனி,ரஷ்யா உள்ளிட்ட 78 நாடுகளை சேர்ந்த 328 விமான நிறுவனங்கள் மற்றும் 295 இந்திய நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

வசீகரிக்கும் இந்திய விமானங்கள்

கடந்த 75 ஆண்டுகளாக விமானத் துறையில் சாதித்து வருவதை நிரூபிக்க, மத்திய அரசு ‘மேக் இன் இந்தியா' திட்டத்தின் புதிய வியூகங்களை வகுத்துள்ளது. அதன்படி புதிய‌ விமானங்கள்,உதிரி பாகங்கள்,பாதுகாப்புத் துறை தளவாடங்கள் குறித்த ஒப்பந்தங்கள் அதிகளவில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. விமான உற்பத்தி துறையில் இந்தியா தற்சார்பு அடைந்து வருவதை வெளிப்படுத்தும் வகையில் கண்காட்சி அமைந்தது.

குறிப்பாக இந்திய தொழில்நுட்பத்தில் உருவான இலகு ரக போர் விமானங்கள்,கப்பல் படை விமானங்கள், ஏவு கணைகள், ஹெலிகாப்டர்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் ருத்ரா, தேஜா போர் விமானம், ஒற்றை என்ஜினில் இயங்கும் கண்காணிப்பு விமானம்,அவசர‌ மெடிக்கல் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவையும் காட்சிப்படுத்தப்பட்டன.

இதே போல துருவ், ருத்ரா, சுகோய், டைகர் மோத், எப்-15சி ஈகிள், லாக்ஹீட் எப்-16சி, போயிங் கேசி-17 போன்ற விமானங்களும் சுகோய்-30, எல்.சி.ஏ.எம்.கெ.-2, எல்.சி.ஏ. ஆகிய 3 வகையான போர் விமானங்களின் சிமுலேட்டர்கள் (மாதிரி பயிற்சி விமானம்) இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றது.

விழாவில் பேசிய மோடி, "பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்துவது அவசியமானது. ஒரு நாட்டின் பாதுகாப்புத் துறை வலுவானதாக இருப்பது அந்நாட்டுக்கு அரணாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டை வளமானதாகவும் வைத்துக் கொள்ள உதவும்" எனக் கூறினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x