இனி கேஷ் ஆன் டெலிவரி முறையிலும் ரயில் டிக்கெட்டுகள்: ரயில்வே அறிமுகம்

இனி கேஷ் ஆன் டெலிவரி முறையிலும் ரயில் டிக்கெட்டுகள்: ரயில்வே அறிமுகம்
Updated on
1 min read

கேஷ் ஆன் டெலிவரி முறையில் பலவிதமான பொருட்களை பெற முடிந்த நிலையில், தற்போது ரயில் டிக்கெட்டுகளையும் இந்த நடைமுறையை பயன்படுத்திப் பெற வாய்ப்பு உருவாகியுள்ளது.

ஆன்லைன் வர்த்தகத்தின் மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதப்படுவது 'கேஷ் ஆன் டெலிவரி' முறை. அதாவது நமக்குப் பிடித்த பொருளை தேர்வு செய்துவிட்டு அது கைக்கு கிடைக்கும்போது பணத்தை கொடுக்கலாம் என்பதே இம்முறையின் முக்கிய அம்சம்.

இந்த நடைமுறை இப்போது இந்திய ரயில்வே துறையிலும் அமலுக்கு வந்துள்ளது.

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஆன் லைனில் டிக்கெட் பதிவு செய்ய தயங்குபவர்களை குறிவைத்தே இந்த திட்டத்தை கொண்டு வருவதாக ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எப்படி பெறுவது?

இத்திட்டத்தின் கீழ் ஒருவர் தனது பயணச்சீட்டை புக் செய்துவிட்டு பின்னர் அந்த டிக்கெட்டை கையில் பெரும்போது பணத்தை கொடுத்தால் போதும். இத்திட்டம் சோதனை அடிப்படையில் 200 நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்லது. பயணத்திற்கு 5 தினங்களுக்கு முன்னர் டிக்கெட்டை முன் பதிவு செய்ய வேண்டும்.

கட்டணம் எவ்வளவு?

இத்திட்டத்தின் கீழ் படுக்கை வசதி கொண்ட ரயிலில் டிக்கெட் முன் பதிவு செய்தால் சாதாரண வகுப்பில் ஒரு டிக்கெட்டுக்கு கூடுதலாக ரூ.40 அளிக்க வேண்டும். அதுவே குளிர் சாதன வசதி கொண்ட வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் என்றால் ஒரு டிக்கெட்டுக்கு கூடுதலாக ரூ.60 வழங்க வேண்டும்.

இந்த கேஷ் ஆன் டெலிவரி சேவையைப் பெற புக்மைடிரெயின்.காம் >(BookMyTrain.com) என்ற இணையத்தை அணுகவும். இந்த இணையதளத்தை, மற்றும் மொபைல் போன்களுக்கான அப்ளிகேஷனை அந்துரில் டெக்னாலஜிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

என்ன பலன்?

ஏற்கெனவே ஆன் லைன் சேவை இருக்கும்போது இந்த முறையால் என்ன பயன் என்ற கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அதிகாரி ஒருவர், இத்திட்டம் மூலம் ரயில் நிலையங்களில் டிக்கெட் கவுன்ட்டர்களில் கூடும் கூட்டம் குறையும், வங்கி கிரெடிட், டெபிட் கார்டு இல்லாதவர்கள்கூட டிக்கெட்டை புக் செய்து கொள்ள முடியும், ஐ.ஆர்.சி.டி.சி. ஆன் லைன் இணையத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் நெரிசலும் கட்டுப்படுத்தப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in