

ஹைதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியில், பயிற்சி ஐபிஸ் அதிகாரிகள் 9 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தெலங்கானா மாநிலத்தில் 1500-க்கும் மேற்பட்டோருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. இவர்களில் 585 பேருக்கு இந்நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் பல்வேறு இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் இதுவரை 51பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வந்த ஐபிஎஸ் அதிகாரிகளில் 9 பேருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே செகந்திராபாத் காந்தி அரசு மருத்துவமனையில், பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த மகபூப்நகர் மாவட்டம், கல்வகுர்த்தி கிராமத்தைச் சேர்ந்த பெண் நேற்று உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 52ஆக உயர்ந்தது.
திருப்பதியில் நேற்று 2 பெண்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.