பெட்ரோலிய அமைச்சக ஆவண திருட்டு வழக்கு: 5 நிறுவன அதிகாரிகளுக்கு போலீஸ் காவல்

பெட்ரோலிய அமைச்சக ஆவண திருட்டு வழக்கு: 5 நிறுவன அதிகாரிகளுக்கு போலீஸ் காவல்
Updated on
2 min read

மத்திய பெட்ரோலியம், எரிசக்திதுறை அமைச்சக ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கின் விசாரணை மேலும் பல அமைச்சகங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் 5 பெரும் நிறுவன அதிகாரிகள் டெல்லி நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வரும் 25-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லியின் சாஸ்திரி பவன் கட்டிடத்தில் உள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தித் துறையின் முக்கிய ஆவணங்கள் திருட்டு வழக்கில் கைதான 7 பேரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன மேலாளரான சைலேஷ் சக்ஸேனா, எஸ்ஸார் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் வினய்குமார், காய்ர்ன்ஸ் இந்தியா நிறுவனத்தின் துணை பொது மேலாளர் கே.கே.நாயர், ஜூப்ளியண்ட் எனர்ஜி நிறுவனத்தின் மூத்த நிர்வாகி சுபாஷ் சந்திரா, ரிலையன்ஸ் ஏ.டி.ஏ.ஜே. நிறுவனத்தின் ரிஷி ஆனந்த் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுடன் சேர்த்து 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான பெரும் நிறுவன அதிகாரிகள் 5 பேரும் திருடப்பட்ட ஆவணங்களை பெற்று வந்துள்ளனர். இவர்கள் அளித்த தகவலின்படி மேலும் பலர் கைதாக இருக்கிறார்கள் என்று டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆவணங்களை திருடுவதற்காக, அமைச்சகத்தின் பகுதிநேர ஊழியர்களுக்கு மாதம் 40 ஆயிரம் ரூபாயை இடைத்தரகர்கள் அளித்து வந்துள்ளனர்.

திருடப்படும் ஆவணங்கள் அதன் முக்கியத்துவத்துக்கு ஏற்ப பெரும் நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இரு இடைத்தரகர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் ஐந்து பெட்டிகள் நிறைய முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இதில், வரும் பிப்ரவரி 28-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் உரைக்கான முக்கிய குறிப்புகள், மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த விரிவான ஆவணங்கள், பிரதமர் மோடியின் முதன்மை செயலாளரான நிருபேந்தர் மிஸ்ரா எழுதிய ஒரு முக்கிய கடிதத்தின் நகல், தேசிய எரிவாயு தொடர் அமைப்பு மீதான திட்ட மதிப்பீடு, பெட்ரோலியம் மீதான ஆய்வு மற்றும் விலை நிர்ணய பிரிவின் முக்கிய முடிவுகள் உட்பட பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பத்திரிகையாளர் சாந்தனு சைக்கியா, மத்திய செய்தி தொடர்புத்துறையின் அடையாள அட்டை பெற்ற மூத்த செய்தியாளர். மத்திய அரசின் பெரும்பாலான துறைகளில் முன் அனுமதி இன்றி நுழையும் அனுமதி பெற்ற அவரது அடையாள அட்டையின் அங்கீகாரம் நேற்று ரத்து செய்யப்பட்டது.

பல்வேறு பிரபல வணிக நாளேடுகளில் 25 ஆண்டுகளுக்கு மேல் சாந்தனு பணிபுரிந்துள்ளார். அவர் மீது ஏற்கெனவே ஆவணங்கள் திருட்டு வழக்கு இருந்தது. எனினும் போதிய ஆதாரம் இல்லாததால் 2009-ம் ஆண்டு விடுவிக்கப்பட்டார்.

கடந்த வருடம் மத்திய அமைச்சக செயலாளர்களின் கூட்டத்தில் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜீத் தோவல், சில மத்திய அமைச்சகங்களின் ஆவணங்கள் திருடப்பட்டு தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தேகம் எழுப்பி இருந்தார். அதை தொடர்ந்து முக்கிய மத்திய அமைச்சகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவற்றை மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போதுதான் இந்த ஆவணத் திருடர்கள் பிடிபட்டனர்.

சாஸ்திரி பவன் அறைகளுக்கு புதிய பூட்டு

சாஸ்திரி பவனில் அமைந்துள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சகத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டது தெரியவந்தது. அலுவலக அறைகளின் பூட்டுகளுக்கு போலி சாவியைப் பயன்படுத்தி திருடப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதனால் அந்த அமைச்சகத்தின் அலுலவக அறைகளுக்கு புதிய பூட்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதுபோல் மற்ற அமைச்சகங்கள் அமைந்துள்ள ஸ்ரம்சக்தி பவன், நிதி ஆயோக், உத்யோக் பவன் ஆகிய கட்டிடங்களிலும் கூடுதலாக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. முக்கிய அதிகாரிகளின் அலுவலக அறைகளுக்கு அடிக்கடி சென்று வந்தவர்களை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணித்து, அவர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைச்சகங்களுக்கு அடிக்கடி வருகை புரிந்தவர்களின் பெயர்களும் பாதுகாப்பு பதிவேட்டிலிருந்து எடுக்கப்பட்டு அவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in