

ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து பிஹார் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி நேற்று நீக்கப்பட்டார்.
அந்த மாநில ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் நிதிஷ்குமாரும் முதல்வர் மாஞ்சியும் தனித்தனியே சந்தித்துப் பேசினர்.
அப்போது புதிய ஆட்சி அமைக்க நிதிஷ்குமார் உரிமை கோரினார். முதல்வர் மாஞ்சி ஆளுநரை சந்தித்தபோது, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
உட்கட்சி பூசல்
கடந்த மக்களவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தோல்வி அடைந்த தற்கு பொறுப்பேற்று நிதிஷ்குமார் முதல்வர் பதவியிலிருந்து விலகினார். இதைத் தொடர்ந்து ஜிதன்ராம் மாஞ்சி புதிய முதல்வராகப் பொறுப்பேற்றார்.
தற்போது பாஜகவுடன் நெருக்கம் காட்டி வரும் மாஞ்சிக்கும் கட்சித் தலைமைக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
எனவே மீண்டும் நிதிஷ்குமார் முதல் வராக ஏதுவாக கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக கடந்த 7-ம் தேதி தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, சட்டப்பேரவையை கலைக்க ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். நேற்று முன்தினம் அவர் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேசினார்.
இந்த பரபரப்பான பின்னணியில் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சி ஐக்கிய ஜனதா தள கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கட்சியின் கொறடா சரவணகுமார் கூறியபோது, கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட காரணத்துக்காக மாஞ்சி 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் என்று தெரிவித்தார்.
நிதிஷ்குமார் எச்சரிக்கை
இந்நிலையில் ஆளுநர் கேசரிநாத் திரிபாதியை முன்னாள் முதல்வர் நிதிஷ் குமார் பாட்னாவில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது தனக்கு 130 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு நிதிஷ் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆளுநர் உடனடியாக முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். அவர் கேட்டுக்கொண்டவுடன் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளோம்.
ஒருவேளை ஆளுநர் எங்களுக்கு அழைப்பு விடுக்காவிட்டால் எனக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ.க்களுடன் நேரடியாக குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடுவேன். அதற்காக டெல்லி செல்ல 140 விமான டிக்கெட்களையும் முன்பதிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஆளுநரை சந்திக்க நிதிஷ்குமார் சென்றபோது ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மற்றும் 130 எம்.எல்.ஏ.க்களும் உடன் சென்றனர்.
ரகசிய வாக்கெடுப்பு நடத்த மாஞ்சி கோரிக்கை
முதல்வர் மாஞ்சி பிற்பகல் 3 மணி அளவில் ஆளுநரை சந்தித்துப் பேசினார். அப்போது, பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
சந்திப்புக்குப் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சட்டப்பேரவையில் பெரும்பான் மையை நிரூபிக்க தேதியை அறிவிக்கு மாறு ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளேன். பிப்ரவரி 19, 20, 23 ஆகியவற்றில் ஏதாவது ஒரு நாளில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக உள்ளேன். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.
கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டிருப்பது சட்டவிரோதமானது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.