

அரசியல் சாசன முகவுரையிலிருந்து ‘மதச்சார்பின்மை’ மற்றும் 'சோஷலிசம்' ஆகிய வார்த்தைகளை நீக்குவது பற்றி மத்திய அமைச்சர் அழைப்பு விடுத்தது குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
இன்று கேள்வி நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியா இந்தப் பிரச்சினையைக் கிளப்பினார். மேலும், அன்னை தெரசா பற்றிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோஹன் பகவத் கருத்துகள் மீதான கேள்வியையும் அவர் எழுப்பினார். ஆனால் சபாநாயகர் சுமித்ரா மஹாஜன் இதற்கு அனுமதி மறுத்தார்.
இது குறித்து சிந்தியா கூறும்போது, “ரவிசங்கர் பிரசாத் (அமைச்சர்) சமீபத்தில் அரசியல் சாசன முகவுரை குறித்து விவாதம் வேண்டும் என்றார். உச்ச நீதிமன்றம் பல முறை கூறியுள்ளது, இந்த வார்த்தைகள் அரசியல் சாசனத்தின் மீற முடியா அங்கம் என்று. இவையெல்லாம் மோடி அரசின் உண்மை முகத்தைக் காட்டுகிறது.
எனவே, அரசியல் சாசன முகவுரை பர்றி அமைச்சர் விவாதம் கோரியதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசு இது குறித்து விளக்கம் அளிக்க கோருகிறோம்” என்றார்.
இதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற விவகார அமைச்சர் வெங்கைய நாயுடு, “இது பற்றிய அரசின் முன்மொழிவு எதுவும் இல்லை. அரசியல் சாசன முகவுரையில் மாற்றம் இல்லை” என்றார்.
முன்னதாக, குடியரசு தினத்தையொட்டி மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் சார்பில் வெளியான விளம்பரத்தில் அரசியல் சாசனத்தின் முகப்புரை (Preamble) படம் இடம்பெற்றிருந்தது.
இந்த முகப்புரை 42-வது அரசியல் சாசன திருத்தத்துக்கு முந்தையது என்பதால் அதில் மதசார்பற்ற, சோஷலிச என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. இந்த விளம்பரம் தொடர்பாக மத்திய அரசு, எதிர்க்கட்சிகளின் கண்டனத்துக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.