Last Updated : 26 Feb, 2015 08:17 AM

 

Published : 26 Feb 2015 08:17 AM
Last Updated : 26 Feb 2015 08:17 AM

ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல்: வருவாயை உயர்த்த கூடுதல் முன்னுரிமை- பயணிகள் கட்டணம் குறையுமா?

நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ள ரயில்வே பட்ஜெட்டில் பயணிகள் கட்டணம் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

டீசல் விலை அதிகரிப்பை காரணம் காட்டி உயர்த்தப்பட்ட ரயில் பயணக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதே ரயிலை அதிகம் பயன்படுத்தும் பாமர மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இப்போது டீசல் விலை குறைந்துள்ள போதிலும் பயணிகள் கட்டணம் குறைக்கப்படாது என்றே தெரிகிறது. ரயில்வே துறையில் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளதும், அதற்கான கட்டணம் பெருமளவில் உயர்ந்துள்ளதும் இதற்கு காரணமாக சுட்டிக்காட்டப்பட வாய்ப்புள்ளது.

அதே நேரத்தில் ரயில்வேயின் வருவாயை உயர்த்துவதற்கான அறிவிப்புகள் கண்டிப்பாக இருக்கும் என்று தெரிகிறது.

நவீனமயத்துக்கு முன்னுரிமை

கடந்த சில வாரங்களாக டீசல் விலை குறைந்துவருவதால், ரயில்வே துறைக்கு சுமார் ரூ.6 ஆயிரம் கோடி மிச்சமாகிறது. அது அப்படியே ரயில்வே திட்டங்களை செயல்படுத்த ஒதுக்கப்படும். அதே நேரத்தில் சுமார் 3200 கோடி ரூபாய் அளவுக்கு அரசிடம் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை கோரும் என்று தெரிகிறது. வருவாயை உயர்த்தி அதன் மூலம் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும், ரயில்வே துறையை நவீனப்படுத்துவதற்கும் பட்ஜெட்டில் அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவே பொன்னான தருணம்

இது தொடர்பாக ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், சரக்கு போக்குவரத்து மூலம் கிடைக்கும் வருவாயும் ஆண்டுதோறும் உயர்ந்து வருகிறது. சமீபகாலமாக டீசல் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. எனவே ரயில்வே துறையில் முதலீட்டை அதிகரிப்பதற்கு இதுவே பொன்னான தருணம். பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்பது உறுதி. டீசல் விலை குறைந்துள்ள போதிலும் பயணிகள் கட்டணம் குறைக்கப்படவும் வாய்ப்பு இல்லை. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 300 திட்டங்கள் கிடப்பில் உள்ளன. அவற்றை முடிக்க பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார்.

தனியாருடன் கைகோர்த்து

புதிய வழித்தடங்கள் அமைத்தல், புதிய ரயில்களை அறிமுகப்படுத்துதல் ஆகியவற்றுக்காக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் பெரிய அளவில் நிதியை கோருவார் என்று தெரிகிறது.

தனியார் துறையுடன் இணைந்து ரயில்வே நவீனமயமாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே கூறியுள்ளார். எனவே தனியார் துறையுடன் கைகோர்க்கும் வகையிலான புதிய அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம் பெறும் என்று தெரிகிறது. , 'மேக் இன் இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கலாம்.

கவரும் அறிவிப்புகள்

மற்றவற்றுடன் ஒப்பிடும்போது கட்டணம் மிகக் குறைவாக இருப்பதால் இந்தியாவில் பொதுமக்கள் ரயில் பயணத்தையே பெரிதும் விரும்புகின்றனர்.

எனவே மக்களை கவரும் வகையில் புதிய ரயில்கள் போன்ற சில கவர்ச்சிகர அறிவிப்புகளும், ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய அறிவிப்புகளும் இடம் பெற வாய்ப்பு உண்டு.

ரயில்வே ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம் ஆகியவை பெருமளவில் அதிகரித்துள்ளதால், ரயில்வே வருவாயில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும் முதலீட்டின் அளவு ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.

திறமையின் அளவுகோல்

முன்னெப்போதும் இல்லாத அளவில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ளது. அதுமட்டுமல்லாது பெரும் எதிர்பார்ப்புடன் பிரதமராக நரேந்திர மோடியை மக்கள் ஆட்சி பீடத்தில் அமர்த்தியுள்ளனர். சிறப்பான நிர்வாகம் தருவோம் என்பது மோடியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியாக இருந்தது. அவரது அரசின் முதல் ரயில்வே பட்ஜெட்டான இது அவரது நிர்வாகத் திறமையை மதிப்பிடுவதற்கான அளவுகோலாகவும் இருக்கும்.

‘எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சித்துள்ளோம்’

ரயில்வே பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடிந்த அளவுக்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.

ரயில்வே பட்ஜெட் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: இப்போது ரயில்வே துறை மிகவும் கடினமான காலகட்டத்தில் உள்ளது. எனினும் பட்ஜெட் தொடர்பான மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடிந்த அளவுக்கு சிறப்பாக முயற்சி மேற்கொண்டுள்ளோம்.

மாநில அரசுகள், எம்.பி.க்கள், சமூகத்தில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து புதிய ரயில்கள், புதிய வழித்தடங்கள் குறித்து ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன. அனைவரையும் முடிந்த அளவுக்கு திருப்திப்படுத்த முயற்சித்துள்ளோம் என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x