

‘ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமனம் செய்தது ஏன்? எந்த சட்டத்தின்படி அவர் நியமனம் செய்யப்பட்டார்?' என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஹெச்.வஹேலா கேள்வி எழுப்பினார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் பவானி சிங் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வருகிறார். அவரை நீக்கக் கோரி திமுக தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த 28-ம் தேதி மேல்முறையீட்டு மனு(ரிட்) தாக்கல் செய்தது. இம்மனு தலைமை நீதிபதி டி.ஹெச்.வஹேலா, அசோக் பி.ஹின்ச்சிகேரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது பவானி சிங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செபாஸ்டியன், “மேல்முறையீட்டு வழக்கை தாமதப்படுத்தும் வகையில் இந்த மனு மீதான விசாரணை அமைந்துவிடக்கூடாது. எனவே, இம்மனு மீதான விசா ரணையை 2 வாரத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும்'' என்றார்.
டி.ஹெச்.வஹேலா கேள்வி
அதற்கு தலைமை நீதிபதி டி.ஹெச்.வஹேலா, “இம்மனு மீதான விசாரணையை தள்ளி வைக்க முடியாது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பவானி சிங்கை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அரசு வழக்கறிஞராக நியமனம் செய்தது ஏன்? எந்த சட்டத்தின்படி அவர் நியமிக்கப்பட்டார்? இவ் வழக்கில் தலையிட தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? எந்த உரிமையின் அடிப்படையில் பவானி சிங் இவ்வழக்கில் அரசு வழக்கறிஞராக தொடர்கிறார்?'' என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பவானிசிங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செபாஸ் டியன், “இவ்வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற போது உச்ச நீதிமன்றத்தின் வழிக்காட்டுதலின்படி கர்நாடக அரசு பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது.
அந்த ஆணையில் இவ் வழக்கு மேல்முறையீட்டிலும் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கே தொடர அனுமதி அளிக் கப்பட்டுள்ளது'' என்றார்.
இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.எல்.என்.ராவ் பேசும்போது, “குற்றவியல் நடை முறைச்சட்டம் 24(8)-ம் பிரிவின்படி அரசு வழக்கறிஞரை நியமிக்க புகார்தாரரான தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அதிகாரம் இருக்கிறது'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, “குற்றவியல் நடைமுறைச்சட்டம் 24(1)-ம் பிரிவின்படி வழக்கு நடக்கும் மாநிலத்துக்கே அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் இருக் கிறது என தெளிவாக கூறப் பட்டுள்ளது''என்றார்.
திமுக தரப்பு வாதம்
இதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.வி.நாகேஷ் பேசும்போது, “கடந்த 2004-ம் ஆண்டு அரசியல் தலையீட்டின் காரணமாக ஜெயலலிதாவின் வழக்கு தமிழகத்தில் இருந்து கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் நீதிபதி, அரசு வழக்கறிஞர் நியமனம் ஆகியவற்றில் தமிழக அரசு தலையிட கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் சட்டத்துக்கு புறம்பாக அரசு வழக்கறிஞரை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை நியமித்துள்ளது'' என்றார்.
அதற்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கறிஞர் டி.எல்.என்.ராவ், “மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை தொடங்கி 20 நாட்கள் கடந்துவிட்டன. தற்போது புதிய அரசு வழக் கறிஞரை நியமித்தால் உச்ச நீதிமன்றம் கூறியவாறு 3 மாதங்களில் இவ்வழக்கை முடிக்க முடியாது'' என்றார்.
இன்று மீண்டும் விசாரணை
இதையடுத்து தலைமை நீதிபதி டி.ஹெச்.வஹேலா, “இந்த மனு தொடர்பாக திமுக, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, பவானி சிங் தரப்பு, கர்நாடக அரசு விவாதிக்க விரும்புவதை எழுத்துப்பூர்வ அறிக்கையாக தயார் செய்து, நாளை (செவ்வாய்க்கிழமை) நீதிமன்றத்தில் சமர்ப்பியுங்கள். அதன்பிறகு விரிவான விவாதம் நடத்தலாம்''என்றார்.