Last Updated : 23 Feb, 2015 09:04 AM

 

Published : 23 Feb 2015 09:04 AM
Last Updated : 23 Feb 2015 09:04 AM

ஆவண திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்: யார் இந்த சாந்தனு சைக்கியா?

பெட்ரோலிய ஆவண திருட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 12 பேரில் முக்கியமானவராக கருதப்படுபவர் சாந்தனு சைக்கியா. டெல்லியின் பிரபல பத்திரிகையாளர்களில் ஒருவரான இவர், சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார்.

வணிகம் மற்றும் நிதித்துறையில் அனுபவம் பெற்ற சாந்தனு திருடப்படும் ஆவணங்களை பிரித்து எடுத்து தனியார் பெருநிறுவனங்களிடம் அதன் விற்பனைக்கான விலையை நிர்ணயித்தார் என போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும் சாந்தனு மீதான குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் நிரூபிப்பது டெல்லி போலீஸாருக்கு பெரிய சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

வணிக நாளேட்டில் இருந்து விலகிய சாந்தனு, கடந்த நவம்பர் 2001 ஆண்டு முதல் ‘இந்தியன் பெட்ரோ டாட்காம்‘ என்ற பெயரில் எரிசக்தி துறைக்கான செய்தி இணையதளத்தை நடத்தி வருகிறார். இத்துடன் ஜூலை 2002 முதல் ‘இந்தியன் பெர்டிலைசர் டாட்காம்’ எனும் மற்றொரு செய்தி இணையதளத்தையும் நடத்தி வருகிறார்.

இரு இணையதளங்களுக்கும் இதுவரை தடை விதிக்கப்படவில்லை. இவை, பெட்ரோலியம், எரிசக்தி, உரம், நிதி, வேணாண்மை, பங்கு சந்தை உட்பட பல்வேறு நிதி தொடர்பிலான துறைகளின் முக்கிய செய்திகளை வெளியிட்டு வருகிறது.

‘எரிசக்தி துறையில் நடந்த ரூ. 10,000 கோடி ஊழலை வெளிப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருப்பதாகவும், அதை தடுத்து நிறுத்தும் வகையில் அரசு என்னை கைது செய்துள்ளது’ என்று சாந்தனு குற்றம் சாட்டியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் வணிக நாளேடுகளின் மூத்த பத்திரிகையாளர் வட்டாரங்கள் கூறியதாவது: வணிக பத்திக்கையாளர்கள் இடையே மிகவும் திறமையானவர் என மதிக்கப்படும் சாந்தனுவின் கைது எங்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அவர் ஒரு பிரபல வணிக நாளேட்டில் பணியாற்றியபோது வெளியிட்ட பங்கு விற்பனை குறித்த செய்திகள் பங்கு சந்தையில் ஒரு பேரலையை ஏற்படுத்தியது. அப்போது சாந்தனு மீது பங்கு விற்பனை ஆவணங்களை திருடியதாக வழக்கு பதிவாகி நடந்து வந்தது. சுமார் பத்து ஆண்டுகளாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. 2009-ம் ஆண்டில் அவருக்கு எதிராக சாட்சிகள் இல்லை என விடுவிக்கப் பட்டார்.

அதில் அவர், தனக்கு கிடைத்த ஆவணங்களை செய்தியாக வெளியிட்டதாக கூறியதுபோல், இந்த வழக்கிலும் நிரூபித்தால் தப்பி விடுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இணையதளங்களில் சாந்தனு எழுதிய செய்திகளை போலீஸார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x