

உயர் அதிகாரிகள் இருவர் தொழிலாளர்களால் தாக்கப்பட்ட தால், மேற்கு வங்கத்தில் உள்ள ரயில் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று அதன் தொழிற் சாலையை மூடியுள்ளது. இதனால், பல நூறு ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் உள்ளது பர்ன் ஸ்டாண்டர்டு நிறுவனம். ரயில் பெட்டிகள் தயாரிக்கும் இது, ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும். இதற்கு ஹெளரா மற்றும் பர்ன்பூர் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு ஒப்பந்த அடிப்படையில் பல தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில் ஹெளரா தொழிற் சாலையைச் சேர்ந்தவர்கள், தங்கள் பணியை நிரந்தரமாக்க வேண்டும் என்றும், இதர வசதிகள் செய்து தர வேண்டும் என்று கூறியும் கடந்த 11ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இத்தொழிற்சாலைப் பணியாளர்கள் 175 பேர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களைச் சமாதானப்படுத்த மேற்கண்ட நிறுவனத்தின் அதிகாரிகள் சாந்தனு சர்க்கார் மற்றும் தெபாஷிஷ் பட்டாச்சார்யா ஆகிய இருவர் சென்றனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட சில தொழிலாளர்கள் அவர்கள் இருவரையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீஸிடம் புகார் தெரிவிக்கப்பட்டு 5 தொழிலாளர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து நிறுவனத்தின் மனித வள இணை பொது மேலாளர் ஜி.எச்.நாக் கூறும்போது, "அதிகாரிகளைத் தாக்கிய அந்த தொழிலாளர்கள் எந்தவொரு கட்சி அல்லது தொழிற்சங்கத்தைச் சார்ந்தவர்களோ இல்லை. ஆனால் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அடையாளத்தோடு கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்கள். எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் இவ்வாறு போராட்டம் நடத்துவதும் தவறு" என்றார்.
மேலும் சில தொழிலாளர்கள் இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார் கள். தவிர, ஹெளரா தொழிற்சாலை மட்டும் தற்காலிகமாக மூடப் பட்டுள்ளது. இதனால் அங்கு பணியில் இருக்கும் 240 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 600 ஒப்பந்த பணியாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.